சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங்கின் ஆட்சியை கவிழ்க்க சதி நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன அணு ஆயுத ரகசியம் CIA-க்கு விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது சீனாவில்?
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக, 2012ம் ஆண்டு ஜி ஜின்பிங் பதவியேற்றார். அடுத்தாண்டே சீனாவின் அதிபராகவும் அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சீன சட்டத்தின்படி, அந்நாட்டு அதிபரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். அமெரிக்காவை போலவே, சீனாவிலும் ஒரு நபரால் 2 முறை மட்டும்தான் அதிபராக பொறுப்பு வகிக்க முடியும். அந்த கணக்கின்படி பார்த்தால், 2013ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜி ஜின்பிங்கின் பதவிக்காலம், 2023ம் ஆண்டுடன் முடிவடைந்திருக்க வேண்டும். சீனாவின் புதிய அதிபராக தற்போது வேறு ஒருவர் பொறுப்பேற்றிருக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. வெறும் 10 ஆண்டுகளில் தனது ஆட்சி நிறைவடைவதை விரும்பாத ஜி ஜின்பிங், 2018ம் ஆண்டு சட்டத்திருத்தம் ஒன்றை கொண்டு வந்தார். அதன்மூலம், சீனாவின் அதிபராக ஒரு நபர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதவி வகிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.
இந்த சட்டத்திருத்தத்தை வேறு வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால் இப்படி கூறலாம், ஜி ஜின்பிங் உயிருடன் இருக்கும்வரை அவர்தான் சீனாவின் அதிபராக இருக்க போகிறார்.
ஜி ஜின்பிங் காலவரையற்று அதிபராக நீடிப்பது, சீன கம்யூனிஸ்ட் கட்சியிலும், சீன ராணுவத்திலும் உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். காரணம், அவர்களால் இனி எப்போதும் அதிபராக முடியாது.
இதனால் அதிருப்தியடைந்த அவர்கள், ஜி ஜின்பிங்கிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கினர். குறிப்பாக, 2012-2015 காலக்கட்டத்தில் சோவ் யோங்காங் (Zhou Yongkang), போ சிலாய் (Bo Xilai), சு சாய்ஹோ (Xu Caihou), லிங் ஜிஹுவா (Ling Jihua) ஆகிய 4 முக்கியத் தலைவர்கள் அரசுக்கு எதிராக சதி செயலில் ஈடுபட்டனர். இவர்கள் 4 பேரும் ஜி ஜின்பிங்கின் ஆட்சியை சீா்குலைக்கவும், அவர் மீண்டும் பதவிக்கு வருவதை தடுக்கவும் முயன்றதாக வெளிப்படையாகவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
2022ம் ஆண்டு உஸ்பெகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் நடைபெற்றது. அதில் பங்கேற்று விட்டு நாடு திரும்பிய ஜி ஜின்பிங் அடுத்த 10 நாட்களுக்கு பொதுவெளியில் தோன்றவேயில்லை. உடனே, ஹூ ஜின்டாவோ, வென் ஜியாபாவோ போன்றோர் ஜி ஜின்பிங்கை பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக செய்திகள் பரவ தொடங்கின. சீன அரசு, ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவை வெறும் வதந்தி என்பது பின்னர்தான் தெரிய வந்தது. இருப்பினும், அந்த வதந்தியை கேட்டு பொதுமக்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சி, ஜி ஜின்பிங்கின் ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை தெளிவுப்படுத்தியது.
இந்த சூழலில்தான், தற்போது ஜி ஜின்பிங்கு எதிராக மீண்டும் சதிச்செயல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜாங் யுக்சியா (Zhang Youxia) என்பவர், சீன ராணுவத்தின் மத்திய ராணுவ ஆணையத்தில் துணைத் தலைவராக உள்ளார். ஜி ஜின்பிங்கின் தந்தைக்கு மிக நெருங்கிய நண்பரான இவர், ஜி ஜின்பிங்கின் சகோதரர் போல கருதப்பட்டு வந்தார். அதேபோல், லியு சென்லி (Liu Zhenli) என்பவர் சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைமைத் தளபதியாக பொறுப்பு வகித்து வந்தார். இவர்கள் இருவரும் இணைந்து ஜி ஜின்பிங்கின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன், சீனாவின் அணு ஆயுத ரகசியங்களை அமெரிக்காவின் உளவு அமைப்பான CIA-க்கு வழங்கியதாகவும் தெரிகிறது.
இதன் காரணமாக, இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், 5 அதிகாரிகளும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் இந்த ஆட்சி கவிழ்ப்பு சம்பவம், சீன ராணுவத்திலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதிர்வலைளைஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், ஜி ஜின்பிங்கிற்கு எதிராக சதி நடைபெற்றதாக சீன அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், சட்டவிதிகளை பின்பற்றாததன் காரணமாகவும்தான் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.
சீனாவில் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்றதை சீன அரசே ஒப்புக்கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது. எனவே, இந்த தகவலின் உண்மை தன்மையை முழுமையாக அறிந்துகொள்ள மேலும் சில நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
















