டெல்லியில் சாரட் வண்டியில் பயணித்து திரௌபதி முர்மு குடியரசு தின விழாவில் கலந்துகொண்டார். சாரட் வண்டியில் அவர் பயணித்தது ஏன்? இந்த சாரட் வண்டியின் வரலாறு என்ன? இந்த வண்டி எப்படி இந்தியா வசம் வந்தது?
நாட்டின் 77வது குடியரசுத் தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள கடமை பாதையில் வழக்கம் போல, மிக பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவருக்கான இல்லத்தில் இருந்து திரௌபதி முர்மு, குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் பயணித்தார். அந்த வண்டிக்கு முன்புறமும், பின்புறமும் குதிரை வீரர்கள் அணிவகுத்து சென்றனர்.
குடியரசுத் தலைவர் பயணித்த இந்த சாரட் வண்டிக்கென தனி வரலாறே உள்ளது. கருப்பு நிறத்தில் தங்க முலாம் பூசப்பட்ட விளிம்புகளுடன் கூடிய அந்த சாரட் வண்டி, ஆறு குதிரைகளை பூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் உட்புறம் சிவப்பு நிற வெல்வெட் துணிகளால் அலங்கரிக்கப்பட்டும், தேசிய சின்னமான அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்டும் உள்ளது.
19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த சாரட் வண்டி தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.கொல்கத்தாவைச் சேர்ந்த Stuart & Co என்ற நிறுவனம் உருவாக்கிய இந்த வண்டியை, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக, இர்வின், லின்லித்கோ (Linlithgow), வேவல்(Wavell) போன்ற பிரபுகள் இந்த சாரட் வண்டியில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பிரிட்டிஷ் இளவரசர்கள் அல்லது பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு வரும்போது, அவர்கள் பயணிக்கவும் இதே சாரட் வண்டிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மவுண்ட்பேட்டன் தான் இந்த வண்டியை கடைசியாக பயன்படுத்திய வைசிராய்.
1947ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றன. அப்போது இரு நாடுகளும் நிலப்பரப்பு, ராணுவ தளவாடங்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள், ரயில்வே சாதனங்கள், கலைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்துகொண்டன.
அந்த சமயத்தில், இந்த சாரட் வண்டியை யார் எடுத்துக்கொள்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. காரணம், இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளுமே இந்த தங்க முலாம் பூசப்பட்ட வண்டிக்கு சொந்தம் கொண்டாடின.
எவ்வளவு பேசிப்பார்த்தும் இரு தரப்பினருமே வண்டியை விட்டுக்கொடுப்பதாக இல்லை. எனவே, ஒரு சுவாரஸ்யமான முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, ஒரு நாணயத்தை சுண்டி விடுவது என்றும், அதில் வெற்றிப்பெறுபவர்களுக்கு சாரட் வண்டி வழங்குவது எனவும் முடிவானது.
அதற்கான நிகழ்வில், இந்தியா தரப்பில், லெப்டினன்ட் கர்னல் தாக்கூர் கோவிந்த் சிங் பங்கேற்றார். பாகிஸ்தான் தரப்பில் சஹாப்ஸாதா யாகூப் கான் (Sahabzada Yaqub Khan) என்பவர் கலந்துகொண்டார். நாணயமும் சுண்டிவிடப்பட்டது. அப்போது, அதிர்ஷ்டம் இந்தியாவின் பக்கம் இருந்ததால், சாரட் வண்டி நமது நாட்டின் வசம் வந்து சேர்ந்தது.

1950ம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் முதல் குடியரசு தின விழாவில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்த சாரட் வண்டியில் பயணித்தார். அன்று முதல் குடியரசு தலைவர்களின் பயணத்திற்காக இவ்வண்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், 1984ம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது, இந்தியாவின் உயர் பதவிகளில் உள்ள தலைவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. அதனால், திறந்த நிலையில் உள்ள இந்த சாரட் வண்டியை பயன்படுத்துவதை குடியரசுத் தலைவர்கள் தவிர்க்க தொடங்கினர். அதற்கு மாற்றாக குண்டு துளைக்காத கார்களில் அவர்கள் பயணிக்க ஆரம்பித்தனர்.
2024ம் ஆண்டு வரலாறு மீண்டும் திரும்பியது. அந்த வருடம், திரௌபதி முர்மு மீண்டும் இந்த சாரட் வண்டியில் பயணித்து குடியரசு தின விழாவில் பங்கேற்றார். அதே நடைமுறையை அடுத்தடுத்து வந்த ஆண்டுகளிலும் பின்பற்ற தொடங்கினார். அதன்படிதான், இந்தாண்டும் குடியரசு தின விழாவில் தங்க முலாம் பூசப்பட்ட, 6 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டி பயன்படுத்தப்பட்டுள்ளது.
















