அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் திருப்பூர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கு மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் பனியன் நிறுவனங்கள் ஏற்றுமதி மூலமாக ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி ஈட்டி வந்தது. மேலும் உள்நாட்டு வர்த்தகத்தில் 35 ஆயிரம் கோடி ரூபாய் என 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தை ஆண்டுதோறும் மேற்கொண்டு வந்தது. இதன் மூலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களான பீகார், ஒரிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து பயன் அடைந்தனர்.
திருப்பூரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களும், சாய ஆலைகள், எம்ராய்டரி பிரின்டிங் என அதன் சார்பு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள கூடுதல் வரி காரணமாக அமெரிக்க ஆர்டர்கள் பெருமளவு நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏற்றுமதியில் 45 சதவிகித சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ஆர்டர்கள் பெரும்பாலும் 1 லட்சம் ஆடைகள், 2 லட்சம் ஆடைகள் என பெரிய அளவில் வரும். அதே சமயம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆடைகள் வரையிலான ஆர்டர்களே கிடைக்கும். இதனால் அமெரிக்க ஆர்டர்களை பெற்ற நிறுவனங்கள் தொடர்ந்து வேலை வாய்ப்புகளை வழங்கி வந்தன. மேலும் வங்கி கடன்கள் பெற்று பல புதிய கிளைகளையும் துவக்கி ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கின. ஆனால் தற்போதையை நிலைமை அப்படியில்லை…
அமெரிக்காவின் 50 சதவிகித வரிவிதிப்பு காரணமாக அமெரிக்க ஆர்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் முற்றிலும் தடைபடுமோ என ஏற்றுமதியாளர்கள் அச்சமடைந்துள்ளனர். வேலை இழப்பையும் தொழிலாளர்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக ஐரோப்பிய மற்றும் பல்வேறு நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து ஆர்டர்கள் பெற்று தயாரிக்க காலதாமதம் ஏற்படும் என்கிறார்கள் ஏற்றுமதியாளர்கள். அதுவரை, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கவும் பண பிரச்சனை இன்றி தொழிலை நடத்தவும் ஏதுவாக மத்திய அரசின் பட்ஜெட்டில் அவர்கள் பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

குறிப்பாக வங்கியில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வட்டி தள்ளுபடி மற்றும் பிற கடன்களுக்கான செலுத்தும் கால அவகாசம் நீட்டிப்பு போன்ற சலுகைகளை மத்திய பட்ஜெட்டில் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் மானிய அறிவிப்புகளை வழங்க வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருப்பூரில் 10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலான முதலீட்டில் தொழில் செய்யக்கூடிய மிகச்சிறிய தொழில்நிறுவன உரிமையாளர்கள், ‘டியூட்டி ட்ராபேக்கை’ அதிகப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர். மிகச்சிறிய மைக்ரோ நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் சலுகைகள் சென்றடைய செய்ய வேண்டும் என்றும், சிறுபான்மையினர் தொழில் தொடங்க சலுகைகள் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதேபோல் திருப்பூரில் பணிபுரியும் தொழிலாளர்களை பொறுத்தவரையில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அந்நிய செலாவணி ஈட்டி தரும் நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது வேண்டுகோளாக இருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் என்ன அறிவிப்பு வெளியாகப் போகிறது என்பதை திருப்பூர் ஏறுமதியாளர்களும் தொழிலாளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
















