மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மறைவுக்கு குடியரசு தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எக்ஸ் பக்கத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விமான விபத்தில் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.
அஜித் பவாரின் அகால மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு என குறிப்பிட்டுள்ள குடியரசு தலைவர், மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக கூட்டுறவுத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என தெரிவித்துள்ளார்.
மேலும், விமான விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் இழப்பை தாங்கும் வலிமையை கடவுள் வழங்கட்டும் என திரௌபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சரும், என்டிஏ கூட்டணிக் கட்சித் தலைவருமான அஜித் பவார் விபத்தில் உயிரிழந்த செய்தி தன்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துப் பிரிவினரின் நலனுக்காக அஜித் பவார் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட விதத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனவும் கூறியுள்ளார். அஜித் பவாரின் மறைவு என்டிஏ குடும்பத்திற்கு மட்டுமின்றி தனக்கும் ஒரு தனிப்பட்ட இழப்பு என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் அகால மரண செய்தியைக் கேட்டு வேதனையடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் அஜித் பவார் என தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் மீதான கருணை மற்றும் பொதுச் சேவையில் கொண்டிருந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் துயர மரணத்தால் ஆழ்ந்த வருத்தமடைந்தாக தெரிவித்துள்ளர்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அவரது பணி மகாராஷ்டிராவின் நிர்வாகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமைலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இன்று காலை விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் அவர்களின் துயர மரணத்தால் நான் ஆழ்ந்த வருத்தமடைந்ததாக தெரிவித்தார்.
பாராமதி தொகுதியிலிருந்து எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஒரு அனுபவமிக்க நிர்வாகி மற்றும் ஒரு முக்கியத் தலைவர் எனறும், அவர் தனது வாழ்வின் பல தசாப்தங்களை பொது சேவைக்கும் மகாராஷ்டிராவின் நலனுக்கும் அர்ப்பணித்தவர். அவரது திடீர் மறைவு மாநிலத்திற்கும் நாட்டிற்கும் ஒரு பேரிழப்பு எனறும் அண்ணாமலை கூறியுள்ளார்.
















