2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்ய உள்ளார். ஏன் இது அபூர்வ நிகழ்வு என்பது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் 1947ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அப்போதைய மத்திய நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியாரால் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பிறகு வெவ்வேறு காலங்களில் இந்தியாவின் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளும் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் தாக்கல் செய்வதே வழக்கமாக இருந்து வந்தது. பிறகு பட்ஜெட் செயல்முறையை நெறிப்படுத்தி, சரியான நேரத்தில் நடைமுறைபடுத்தவும் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
2017ம் ஆண்டில், பட்ஜெட் தேதியை பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளிலிருந்து அம்மாதத்தின் முதல் தேதிக்கு மாற்றி அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதன் பிறகு இடைக்கால பட்ஜெட்களைத் தவிர, மத்திய பட்ஜெட் எப்போதுமே பிப்ரவரி ஒன்றாம் தேதி தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
இப்படி முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்வதால், ஏப்ரல் மாதத்தில் நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பு தேவையான மாற்றங்களை அரசின் அமைச்சகங்கள் மற்றும் பிற துறைகள் மேற்கொள்வதற்கு அதிக நேரம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளை மாற்றியது போலவே, பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து நேரத்துடன் ஒத்துப்போகும் வகையில், மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்வதே இந்தியாவில் வழக்கமாக இருந்து வந்தது.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தை காலை 11 மணியாக மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
1999ம் ஆண்டு, அப்போதைய மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா,மத்திய பட்ஜெட்டை முதல் முறையாக காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அன்றிலிருந்து, இந்தியாவில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய பட்ஜெட் காலை 11 மணிக்குத் தாக்கல் செய்யப்பட்டுவருகிறது.
இந்த ஆண்டு,நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப் படுகிறது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமரான மோடி தலைமையிலான அரசின் மூன்றாவது பட்ஜெட் இதுவாகும்.
மேலும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராம் தாக்கல் செய்யும் 9 வது பட்ஜெட் ஆகும்.
இதன் மூலம், அதிக எண்ணிக்கையிலான மத்திய பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்த பெருமையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் 2026 பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
பட்ஜெட்டுக்கு முன்னதாக வரும் ஜனவரி 29-ம் தேதி பொருளாதார ஆய்வு அறிக்கையை நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தாக்கல் செய்ய உள்ளார்.
புதிய வரி முறையின் கீழ் 12 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட்டில் என்னென்ன சலுகை அறிவிப்புகள் இருக்கும் என்று வரி செலுத்தும் மக்கள் இடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக ரயில்வே, உள்கட்டமைப்பு, நகர்ப்புற மேம்பாடு, உற்பத்தி, ஆட்டோமொபைல், பாதுகாப்பு, மின்னணுவியல், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கான ஒதுக்கீடுகள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் பட்ஜெட் 2026 கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















