வெளிநாட்டு உளவு அமைப்புகள் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த தகவல்களை சேகரிப்பதற்காக கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூகத்தை அதிகளவில் பயன்படுத்தி வருவதாகவும், உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
நாட்டின் பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்படும் புதிய யுக்திகள், அரசின் செயல்பாடுகள் குறித்த ரகசிய தகவல்களை சேகரிக்க வெளிநாட்டு உளவுத்துறை பிரிவுகள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன என்றும், சீன உளவு அமைப்புகள் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த தகவல்களை சேகரிக்க, பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை சார்ந்த வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், என்சிசி மாணவர்கள் உள்ளிட்டோரிடம் ஆதாரப் பூர்வமான தகவல்களை சேகரிக்க புதிய முறையை உளவு அமைப்புகள் பின்பற்றுகின்றன என்றும், வேலைவாய்ப்பு இணையதளங்கள் மூலம் கள அனுபவம் வாய்ந்தவர்களின் கட்டுரைகளுக்கு, அதிக சன்மானம் வழங்குவதாக விளம்பரம் செய்கின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.
தேசபக்தி சார்ந்த உணர்ச்சிகரமான தலைப்புகளில் கட்டுரைகள் கோரும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலமுறை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேச நலன், பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் சார்ந்த விஷயங்களை, அறிமுகமில்லாத நபர்களுக்கு பகிரக்கூடாது என்றும், அதேபோல், தனிநபர்களின் வங்கிக் கணக்கு, பான், ஆதார் எண்களையும் பகிரக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அறிவு சூழலுக்கு எதிரான தகவல் போரில், தரவு சுரண்டலுக்கு யாரும் பலியாகக் கூடாது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,
















