நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் புத்தகத்தின் விற்பனைக்கு தடை விதிக்ககோரி வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி குறித்து தவறாக சித்தரிக்கும் புத்தகத்தை பறிமுதல் செய்யவும், புத்தக காட்சியில் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கடந்த 7ம் தேதி முதல் நடைபெற்ற புத்தகக் காட்சியில், குறிப்பாக கீழைக்காற்று பதிப்பகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த இரு அரங்குகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டதாகவும், அங்கு சர்ச்சைக்குரிய புத்தகம் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் கீழைக்காற்று பதிப்பகம் கடந்த ஜனவரி 1ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகள், கேலிச்சித்திரங்கள் என அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து அவதூறு பரப்பும் புத்தகங்கள் ஏதேனும் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















