பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தனியாா் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஹெச்.ராஜா, திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கு முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து உயா் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஹெச்.ராஜா அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று ஹெச்.ராஜாவை சந்தித்து நலம் விசாரித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் ஹெச்.ராஜாவின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறினார். ஹெச்.ராஜா பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
















