சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி பாஜக சார்பில் பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நேரடியாகக் கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி சார்பில் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளராக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பெட்டகத்தை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் ராமலிங்கம், சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மக்கள் பங்கேற்புடன் தேர்தல் அறிக்கை தயாரிப்பது பாஜகவின் தனித்துவமான முயற்சி என்றும், மக்களின் குரல் நேரடியாக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் எனவும் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
















