இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும் இந்தியாவுக்கான 25 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்ததோடு மட்டுமில்லாமல், ஏற்கெனவே இருந்த 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் மூலம், வர்த்தகக் கொள்கை, புவிசார் அரசியல் உத்தி, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உலகளாவிய சந்தை மறுசீரமைப்பு என பிரதமர் மோடி ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய பிறகு, இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்துள்ளார் அதிபர் டிரம்ப். மேலும்,இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடனான வா்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்தவும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும் இந்தியா உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ள ட்ரம்ப், அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவின் எண்ணெய்யை அதிகளவில் இந்தியா கொள்முதல் செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2024-ல் 212.3 பில்லியன் டாலராக இருந்த இருதரப்பு வர்த்தகம் 2025-ல் 230 பில்லியன் டாலரைத் தாண்டியது. அடுத்த 5 ஆண்டுகளில் இது 500 பில்லியன் டாலராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவின் பல நாடுகள் அதிகமான அமெரிக்க வரி விதிப்பை எதிர்கொள்ளும் நிலையில் இந்தியாவுக்கு 18 சதவீத வரி என்பது உலகலாவிய சந்தை பொருளாதாரத்தையும் விநியோக சங்கிலியையும் மாற்றி அமைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பிரிட்டனுக்கு 10 சதவீதமும், ஐரோப்பிய யூனியன், சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு 15 சதவீதமும், பிரேசிலுக்கு 50 சதவீதமும், தென்னாப்பிரிக்காவுக்கு 30 சதவீதமும், வியட்நாம், பிலிப்பைன்ஸ்,வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு 20 சதவீதமும், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் மலேசியாவுக்கு 19 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.
சீனாவுக்கு 40 சதவீத வரியும் fentanyl கடத்தல் சட்டங்களின் கீழ் மேலும் அதிக வரிகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல லாவோஸ் மற்றும் மியான்மருக்கும் 40 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.
அவுட்சோர்சிங் செய்வதில் சீனாவை பெரிதும் நம்பியுள்ள நிலையில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் சீனாவின் பிளஸ் ஒன் வியூகத்தின் படி, சீனாவுக்கு மாற்றாக இந்தியாவையே தேர்ந்தெடுக்கின்றன.
இந்தச் சூழலில்,18 சதவீத வரி இந்தியாவுக்கு உலகளாவிய முதலீட்டையும் இந்திய வணிகர்களுக்கு பெரும் லாபத்தையும் கொண்டுவந்து சேர்க்கும் என்று கூறப் படுகிறது.
இந்த வரி குறைப்பால் இந்தியாவின் ஜவுளி, கடல் உணவு, ஆட்டோமொபைல் மற்றும் ரசாயனத் துறைகள் பெருமளவில் பயனடையும் என்று கூறப் படுகிறது
குறிப்பாக லாப வரம்புகள் பெரும்பாலும் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை இருக்கும். அதிக தொழிலாளர்கள் தேவைப்படும் ஜவுளி, ஆயுத்த ஆடை மற்றும் காலணிகள் போன்ற துறைகளுக்கு இந்த ஒப்பந்தம் நன்மை அளிக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் அத்துறைகளில் இந்தியாவுக்குப் போட்டியாக உள்ள பாகிஸ்தான் வங்கதேசம் மற்றும் சீனாவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் கணிக்கப் படுகிறது.
ஏற்கெனவே கடந்த ஆண்டு, நியூசிலாந்து,ஓமன்,பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா, இந்த ஆண்டு,77வது குடியரசு தினத்தைக் கொண்டாடிய கையோடு ஐரோப்பிய யூனியனுடன் வரலாற்று சிறப்பு மிக்க வர்த்தக உடன்பாட்டை எட்டியது குறிப்பிடத் தக்கது.
















