ஏ.ஐ. உச்சி மாநாட்டில் சீன தயாரிப்பான ரோபோ நாயை காட்சிப்படுத்திய உத்தரபிரதேச பல்கலைக்கழகம் வெளியேற்றப்பட்டுள்ளது. அங்கு நடந்தது என்ன? பல்கலைக்கழகம் கொடுத்த விளக்கம் என்ன?
டெல்லி பாரத் மண்டபத்தில் முதல்முறையாக ‘இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026’ எனும் தலைப்பில் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்தி வருகிறது இந்தியா.. பிப்ரவரி 16ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த பிரமாண்ட மாநாட்டில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 13 நாடுகள் அரங்குகளை அமைத்துள்ளன. ஒவ்வொரு நிறுவனமும், தாங்கள் கண்டுபிடித்த பிரத்யேக கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றன..
மாநாட்டில் பங்கேற்க வருமாறு 100 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச அளவிலான தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்துறை தலைவர்கள், மாணவர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். ஏஐ மாநாட்டில் புதிய கண்டுபிடிப்புகள் அனைவரின் முன்னிலையிலும் காட்சிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், சில கண்டுபிடிப்புகள் வரவேற்பை பெற்றுள்ளதோடு, சர்வதேச கவனத்தையும் ஈர்த்து வருகின்றன…
இந்த சூழலில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் சீன ரோபோ நாய் ஒன்றை காட்சிப்படுத்தியது சர்ச்சையை கிளப்பியதோடு, கடுமையான விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட யுனிட்ரீ கோ-2 என்ற ரோபோ நாய் ஆன்லைனில் 3 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், அதனை விலை கொடுத்து வாங்கியுள்ள கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர்கள், அந்த ரோபோட்டிற்கு ஓரியன் என பெயர் வைத்ததோடு, தாங்கள்தான் உருவாக்கினோம் என உரிமை கோரியதாக வீடியோ வெளியானது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி கடும் விமர்சனத்தை சம்பாதித்தது. இதன் எதிரொலியாக, ஏஐ மாநாட்டில் இருந்த பல்கலைக்கழக அரங்கத்தில், மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. அதே நேரத்தில் இந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்த கல்கோடியாஸ் பல்கலைக்கழக பேராசியர் நேஹா சிங், ஓரியன் ரோபோவை தாங்கள் உருவாக்கியதாக உரிமை கோரவில்லை என்றும் விளக்கினார். ஒருவேளை தான் தவறான தகவல்களை வழங்கியிருக்கலாம் என்றும் கூறினார்.
TRANS CARD விஷயங்கள் தெளிவாக வெளிப்படுத்தாத காரணத்தால்தான் சர்ச்சை எழுந்திருக்கிறது, நான் அதை சரியாக கூறாமல் இருந்திருக்கலாம் என்பதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். முக்கியமான விஷயம் என்னவென்றால் ரோபோ நாயின் மேலேயே அதனை தயாரித்த நிறுவனத்தின் பெயர் உள்ளது, நிறுவனத்தில் பெயரை நாங்கள் மாற்றவில்லை.. பின்னர் எப்படி, ரோபோ நாயை நாங்கள் தயாரித்தோம் என்று கூற முடியும்.. எங்கள் மாணவர்கள் தாங்களாகவே சிறந்த ஒன்றை ஊக்குவிப்பதற்காக அதனை அறிமுகப்படுத்தினோம் என்றுதான் கூறியுள்ளேன்.
அதன் தொடர்ச்சியாக கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஏ.ஐ. மாநாட்டில் தங்களால் ஏற்பட்ட குழப்பத்திற்கு உண்மையில் மன்னிப்பு கேட்க விரும்புவதாக கூறியுள்ளது. அரங்கத்தை நிர்வகித்த பிரதிநிதிகளில் ஒருவர் தவறான தகவலை பெற்றதாகவும், தயாரிப்பு தொழில்நுட்பம் குறித்து அவருக்கு தெரியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் பத்திரிகையாளர்களிடம் பேச அவருக்கு அதிகாரம் இல்லை என்றாலும், கேமரா முன்பு நிற்கிறோம் என்ற ஆர்வத்தில், உண்மையில் தவறான தகவலை அளித்துவிட்டதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் ஏற்பாட்டாளர்கள் உணர்வை புரிந்து கொண்டு, நாங்கள் வளாகத்தில் இருந்து வெளியேறுவதாகவும் கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
கல்கோடியாஸ் பல்கலைக்கழக அரங்கம் ஏ.ஐ. மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதன் மூலம் சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
















