கோவை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ‘Udaan Yatri Cafe’ உள்ளிட்ட பல புதிய வசதிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன,
நிகழ்ச்சியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இணை அமைச்சர் முரளிதர் மோகல் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு குறைந்த விலையில் சிற்றுண்டி வழங்கும் Udaan Yatri Cafe, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி மற்றும் நூலகம் ஆகியவற்றை மத்திய அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் கோவைக்கு நேரடி சர்வதேச இணைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதற்கான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன என்றும், கோவை நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப விமான நிலையமும் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், கடந்த 1998ஆம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழாமல் இருந்திருந்தால், கோவை மாநகரின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்திருக்கும் என குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தஞ்சாவூர், வேலூர், நெய்வேலி ஆகிய இடங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு உரிய முன்அனுமதி வழங்கி உள்ளதாகவும், நிலம் கையகப்படுத்தும் பணிகளை மாநில அரசுதான் மேற்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
















