கசகஸ்தான் நாட்டில் பொது ஒழுங்கை மேம்படுத்தும் நோக்கில், “ட்ரோன் போலீஸ்” கண்காணிப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அல்மாட்டி நகரின் முக்கிய சாலைகள், நடைபாதைகள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில், இந்த ட்ரோன்கள் வானில் ரோந்து பணிகளை மேற்கொள்கின்றன. இவற்றின் மூலம் குப்பை வீசுதல், சிறிய அளவிலான சட்ட மீறல்கள் போன்றவைகள் கண்காணிக்கப்படுகின்றன. விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், ஒலிபெருக்கி மூலம் உடனடியாக எச்சரிக்கை வழங்கும் வசதியும் இதில் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸ் படையை அனுப்பாமல் நகரின் பல பகுதிகளை ஒரே நேரத்தில் கண்காணிக்க இது உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல், பொது இடங்களில் பொறுப்புணர்வை வளர்த்துச் சமூக ஒழுங்கை மேம்படுத்தும் நடவடிக்கையாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், மக்கள் நல்ல பழக்கங்களை கடைப்பிடிக்க ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கம் எனவும் நகர நிர்வாகம் விளக்கியுள்ளது.
















