தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், ஒட்டுமொத்தமாக 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்,எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பின் தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அதில் ஜனவரி 31ம் தேதி வரை தமிழகத்தில் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவித்தார். அதில் 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 ஆண் வாக்காளர்களும், 2 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 838 பெண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 617 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 991 வாக்காளர்கள் இருப்பதாகவும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 896 வாக்காளர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், விசிகவைச் சேர்ந்த செல்வம் உள்ளிட்ட பலர் முன்னிலையில் சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான குமரகுருபரன் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 856 வாக்காளர்களும், பெரம்பூர் தொகுதியில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 792 வாக்காளர்களும், கொளத்தூர் தொகுதியில் 2 லட்சத்து ஏழாயிரத்து 251 வாக்காளர்களும் உள்ளனர்.
அதேபோல், வில்லிவாக்கம் தொகுதியில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 764 வாக்காளர்களும்,
திருவிக நகர் தொகுதியில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 793 வாக்காளர்களும், எழும்பூர் தொகுதியில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 879 வாக்காளர்களும் உள்ளனர்.
ராயபுரம் தொகுதியில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 931 வாக்களர்களும், துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 896 வாக்களர்களும், சேப்பாக்கம் தொகுதியில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 866 வாக்களர்களும் உள்ளனர்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 903 வாக்காளர்களும், அண்ணா நகர் தொகுதியில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 402 வாக்காளர்களும், விருகம்பாக்கம் தொகுதியில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 536 வாக்காளர்களும் உள்ளனர்.
மேலும், சைதாப்பேட்டை தொகுதியில் 2 லட்சத்து 697 வாக்காளர்களும், தியாகராய நகர் தொகுதியில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 943 வாக்காளர்களும் உள்ளனர்.
மயிலாப்பூர் தொகுதியில் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 731 வாக்காளர்களும், வேளச்சேரி தொகுதியில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 691 வாக்காளர்களும் என ஒட்டு மொத்தமாக 28 லட்சத்து 30 ஆயிரத்து 936 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட போது 25 லட்சத்து 79 ஆயிரத்து 676 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 28 லட்சத்து முப்பதாயிரத்து 936 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 2 லட்சத்து 51 ஆயிரத்து 60 வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர்.
இதில் 13 லட்சத்து 65 ஆயிரத்து 763 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 64 ஆயிரத்து 344 பெண் வாக்காளர்களும், 829 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
















