உலகின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எல் மென்சோ, மெக்சிகோ சிறப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளார். அதனால், மெக்சிக்கோவின் 5 மாநிலங்களில் கடத்தல் கும்பல் வன்முறைகளைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதனால், பல நகரங்களும் தீக்கிரையாகியுள்ளன. யார் இந்த ‘எல் மென்சோ’ ? அவர் பின்னணி என்ன என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மெக்சிகோவின் மிகவும் சக்திவாய்ந்த ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்’ (CJNG) என்ற போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனும், அமெரிக்காவால் 136 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்து தேடப்பட்டுவந்த ‘எல் மெஞ்சோ’ ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1966ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி மெக்ஸிகோவின் அகுயில்லா மிக்கோவாகனில் பிறந்து வறுமையில் வளர்ந்த எல் மென்சோ சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து, சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வந்தார்.
திருடிய குற்றத்துக்காகவும், சட்ட விரோத துப்பாக்கியை வைத்திருந்ததற்காகவும் தனது 19 வயதில் கைது செய்யப்பட்ட எல் மென்சோ மெக்ஸிகோவிற்கு நாடு கடத்தப்பட்டார். மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பிய எல் மென்சோ போதைப்பொருள் குற்றச்சாட்டில் 1992-ல் மீண்டும் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். அதன் பிறகு மெக்ஸிகோவிற்கு நாடு கடத்தப் பட்ட எல் மென்சோ, ஜாலிஸ்கோ காவல்துறையில் சேர்ந்தார்.
1996-ல் சக்திவாய்ந்த போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவரான அர்மாண்டோ வலென்சியாவின் மருமகள் ரோசலிண்டா கோன்சலஸ் வலென்சியாவை மணந்த எல் மென்சோ, சினாலோவா போதைப்பொருள் கடத்தல் கும்பலின் துணை நிறுவனமான வலென்சியாவின் மிலினியோ கார்டெல்லில் சேர்ந்தார்.
மிலேனியோ கும்பலில் சேர்ந்த எல் மென்சோ, சினாலோவா மீதே போரை அறிவித்து, 2009ம் ஆண்டில் உள்ளூர் பணமோசடி கும்பலுடன் இணைந்து ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்’ ஏற்படுத்தினார்.
எல் மென்சோவின் போதைப் பொருள் கடத்தல் சாம்ராஜ்யம் 50 அமெரிக்க மாநிலங்கள், 25க்கும் மேற்பட்ட மெக்சிகன் மாநிலங்கள் உட்பட 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் விரிவடைந்துள்ளது. மெக்சிகோவில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளில் ஒன்றான ஜாலிஸ்கோ கார்டெல், கோகோயின், மெத்தம்பேட்டமைன் மற்றும் ஃபெண்டானைல் போன்ற செயற்கை போதை பொருட்களை மருந்துகளை அமெரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கும் பெருமளவில் கடத்தி வருகிறது.
வெடிபொருட்களை வீச ட்ரோன்களைப் பயன்படுத்துவது, கண்ணிவெடிகளை வைப்பது,
மெக்சிகோ இராணுவ ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்துவது, ஆயுதங்கள் கடத்துவது, மிரட்டி பணம் பறிப்பது, எரிபொருள் திருடி கடத்துவது, சட்டவிரோத மரம் வெட்டுவது, சுரங்கம் கட்டுவது, மனித கடத்தலில் ஈடுபடுவது என சுமார் 15,000 முதல் 20,000 பேரை உறுப்பினர்களாக கொண்ட இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
வன்முறையை விளம்பரப்படுத்த பெரும்பாலும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்திய இந்தக் கடத்தல் கும்பலை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக கடந்த பிப்ரவரி மாதம் தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
இதையடுத்து, உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய மெக்சிகன் ராணுவம் டபல்பா ஜாலிஸ்கோவில், எல் மென்சோ பதுங்கி இருப்பதைக் கண்டுபிடித்தது. கடத்தல் கும்பலுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 7 உறுப்பினர்கள் கொல்லப்பட்ட நிலையில் காயமடைந்த எல் மென்சோவை மெக்சிகோவுக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரும் வழியில் மரணமடைந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது.
மெக்சிகோவின் ஜாலிஸ்கோ, குவாடலஜாரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல்களில் பேருந்துகள் உட்பட பல வாகனங்கள் தீவைத்து கொளுத்தப் பட்டுள்ளன. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான Puerto Vallarta-வில் வானம் வரை அடர்த்தியான கரும்புகை சூழ்ந்துள்ள கரும்புகை வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
நகரமே தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. முக்கிய சாலைகள் தடுக்கப்பட்டுள்ளன. விமான நிலையம் மூடப்பட்டு விமானங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. விமான நிலையங்களில் மக்கள் பீதியடைந்து ஓடும் காட்சிகள் மனதைப் பதற வைக்கின்றன.
நிலைமை சீராகும் வரை மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு ஜாலிஸ்கோ ஆளுநர் பாப்லோ லெமஸ் நவரோ, கேட்டுக் கொண்டுள்ளார். அங்குள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மெக்சிகோவில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஜாலிஸ்கோ மற்றும் பிற மெக்சிகோ மாநிலங்களுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எல் மென்சோ கொல்லப்பட்டிருப்பதை அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ் வரவேற்றுள்ளார்.
ஒரு சர்வாதிகாரி போல செயல்பட்டு வந்த உலகின் மிகவும் சக்தி போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கொல்லப்பட்டு விட்டான். ஆனால் அவன் கட்டியெழுப்பிய அசுர இயந்திரம் அடுத்த தலைவர் யார் என்று தெரியாமல் அட்டூழியம் செய்து செய்கிறது.
















