சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ராட்சத ஆமைகள் ஈக்வடார் நாட்டின் கலாபகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள புளோரியானா தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
19-ஆம் நூற்றாண்டில் மாலுமிகள் மற்றும் கடற்கொள்ளையர்களால் வேட்டையாடப்பட்டதாலும், வெளிநாட்டு விலங்குகளின் ஊடுருவலாலும் புளோரியானா தீவில் இருந்த ராட்சத ஆமைகள் முற்றிலும் அழிந்தன. தற்போது ஈக்வடார் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள வீடியோவில், வனக்காவலர்கள் 150-க்கும் மேற்பட்ட ஆமைகளைத் தீவின் இயற்கைச் சூழலில் விடுவிக்கும் நெகிழ்ச்சியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ராட்சத ஆமைகள் சுற்றுச்சூழல் பொறியாளர்களாக அழைக்கப்படுகின்றன. இவை விதைகள் பரவுவதற்கும், தாவரங்களின் வளர்ச்சியைச் சீராக வைப்பதற்கும் உதவுகின்றன. இந்த ஆமைகளின் வருகை கலாபகோஸ் தீவின் ஒட்டுமொத்த இயற்கை சமநிலையை மீண்டும் கொண்டு வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இது ஒரு நூற்றாண்டின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் இந்த ஆமைகள் மீண்டும் தங்கள் பூர்வீக நிலத்திற்குத் திரும்பியிருப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு புதிய மைல்கல் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
















