திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கேரளம் மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பூரம் நட்சத்திர நாளில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம். நடப்பாண்டு பொங்கல் விழா கடந்த மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.
காலை 9.45 மணிக்கு கோயிலில் இருந்து தந்திரி தீபம் எடுத்து வந்த நிலையில், தலைமை பூசாரி முதலில் பண்டார அடுப்பில் பற்ற வைத்து பொங்கல் வழிபாடை தொடக்கி வைத்தார்.
அதன்பின், அனைத்து அடுப்புகளிலும் நெருப்பு பற்ற வைக்கப்பட்டு பெண்கள் பொங்கல் வைத்தனர்.
திருவனத்தபுரம் நகரப்பகுதி முழுவதுமாக லட்சகணக்கான பெண்கள் பொங்கல் வழிபாடு நடத்தியதால் நகர் பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்பட்டது.
அப்போது குட்டி விமானம் மூலம் பொங்கல் வழிபாடுகளில் அர்ச்சனை பூக்கள் தூவப்பட்டன. மேலும், கோயில் நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு இலவசமாக குடிநீர் மற்றும் உணவு வழங்கப்பட்டன.
















