திருப்பூரில் வழக்கமான கட்டட வடிவமைப்புகளுக்கு மத்தியில், தேசப்பற்றை பறைசாற்றும் வகையில் பிரம்மாண்ட ரஃபேல் விமான மாதிரியுடன் கூடிய கட்டடம் ஒன்று பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
திருப்பூர் காங்கேயம் கிராஸ்கட் சாலையில் கரீம் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். தனது கட்டிடத்தை விரிவாக்கம் செய்தபோது, அதில் ஏதேனும் ஒரு சிறப்பம்சம் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். குறிப்பாக, ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் ஈட்டிய வெற்றியையும், அந்தப் போரில் துணிச்சலாகச் செயல்பட்ட இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளின் வீரத்தை கௌரவிக்கும் வகையிலும் இந்த வடிவமைப்பை அவர் தேர்வு செய்துள்ளார்.
இந்தக் கட்டிடத்தின் மொட்டை மாடியில், இந்திய விமானப் படையின் பெருமையான ரஃபேல் போர் விமானத்தின் மாதிரி, தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. வெறும் விமானம் மட்டுமல்லாமல், அது ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலின் தளத்தில் நின்று கொண்டிருப்பது போன்றே தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மின் விளக்குகள் ஒளிரும்போது, நிஜமான போர் விமானம் ஒன்று கட்டிடத்தின் மேல் லேண்ட் ஆகியிருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது.
இந்த அரிய முயற்சியைச் சாத்தியப்படுத்தியவர் கட்டிடக் கலைஞர் பழனிச்சாமி. இவர்
கட்டிட உரிமையாளர்களின் ரசனைக்கு ஏற்ப வந்தே பாரத் ரயில், ஹெலிகாப்டர், ஏவுகணை, சொகுசு கார் எனப் பல வடிவங்களை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ரஃபேல் விமானக் கட்டிடம் தற்போது அந்தப் பகுதியின் “லேண்ட்மார்க்” ஆக மாறிவிட்டது. தேசத்தின் பாதுகாப்பிற்காகப் போராடும் ராணுவத்தினருக்குச் செலுத்தும் மரியாதையாக இது பார்க்கப்படுவதால், சமூக வலைதளங்களிலும் இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
















