கன்னியாகுமரியில் பணிகள் நிறைவுபெறும் முன் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் மினி ஸ்டேடியத்தில், விளையாட்டு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மினி ஸ்டேடியம் முழுமையாக பணிகள் நிறைவடையாத நிலையில், கடந்த மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் வருகையின்போது அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த மினி ஸ்டேடியத்தில் நேற்று விளையாட்டு திருவிழா தொடங்கியது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளதாகவும், அப்போது களரி ஆராய்ச்சி மையம் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனால் மதியம் முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், விளையாட்டு வீரர்கள், களரி மற்றும் சிலம்ப கலைஞர்கள் மினி ஸ்டேடியத்தில் குவிந்தனர். ஆனால், துணை முதலமைச்சர் உதயநிதி வர கால தாமதமானதால், விளையாட்டு திருவிழாவை தொடங்க அனைவரும் இரவு வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து அங்கு வந்த துணை முதலமைச்சர் உதயநிதி மேடையேறாமல், நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு அங்கு நடந்த களரி கலை நிகழ்ச்சியை மட்டும் பார்வையிட்டு அவசரமாக புறப்பட்டுச் சென்றார். இதனால் நீண்ட நேரமாக அங்கு காத்திருந்த விளையாட்டு வீரர்களும், கட்சி தொண்டர்களும் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர்.
















