நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ், அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது.
இந்த வழக்கில் நியோ மேக்ஸ் நிறுவனத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை, பொது ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உயர்நீதிமன்றக் கிளை வழக்கை ஒத்திவைத்தது.
இந்நிலையில், வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, நிலங்களை அதிக விலைக்கு யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு விற்பனை செய்து,
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், யார் வேண்டுமானாலும் நிலங்களை வாங்கிக் கொள்ளலாம், அதில் உள்நோக்கத்துடன் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
















