மேலூர் அருகேயுள்ள முத்தாலம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சு விரட்டில், 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தது பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள சேக்கிப்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மாசி திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. தொடர்ந்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஊர் பெரியவர்கள் மூலம், தர்கா காளைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக தொழுவத்தில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் ஆர்வத்துடன் அடக்க முயன்றனர்.
















