அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை, ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை ஹாலிவுட் திரைப்படக் காட்சிகளுடன் கலந்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் தனது படத்தின் காட்சியைப் பயன்படுத்தியதற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் இயக்குநர் பென் ஸ்டில்லர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்பட்ட 42 வினாடி ஓடக்கூடிய அந்த வீடியோவில், ஈரான் மீதான அமெரிக்காவின் உண்மையான ஏவுகணைத் தாக்குதல்களுடன் முன்னணி ஹாலிவுட் படங்களின் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தாம் இயக்கி நடித்த ‘டிராபிக் தண்டர்’ படத்தின் காட்சியை அனுமதி இன்றிப் பயன்படுத்தியதற்கு பென் ஸ்டில்லர் தனது எக்ஸ் தள பக்கத்தில் காட்டமான பதிவை வெளியிட்டுள்ளார். “நாங்கள் இதற்கு ஒருபோதும் அனுமதி அளிக்கவில்லை. உங்கள் பரப்புரை இயந்திரத்தின் ஒரு பகுதியாக இருக்க எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை. போர் என்பது ஒன்றும் திரைப்படம் அல்ல,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
















