நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில், ஆற்றில் குளிக்கச் சென்றபோது ஏற்பட்ட தகராறில் முதியவரை ஒரு கும்பல் அரிவாளால் தாக்கிய சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதயமார்த்தாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த 75 வயதாகும் முருகன் என்ற விவசாயி, தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றார்.
அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து தகராறில் ஈடுபட்டதுடன், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. பின்னர் அங்கிருந்து அரியநாயகிபுரம் கிராமத்திற்குள் தப்பிச் சென்ற அந்தக்கும்பல், அங்கிருந்த நெல் மூட்டைகளை சேதப்படுத்தியது.
முதியவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் கைது செய்யவில்லை எனக்கூறி, ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மனு அளிக்கச் சென்றபோது தடுத்து நிறுத்திய போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக இருப்பதால் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
















