மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, துபாய் மற்றும் தோஹாவிலிருந்து சுமார் 800 கிரீஸ் மக்களை அந்நாட்டு அரசு தாயகம் அழைத்து வந்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், வளைகுடா நாடுகளின் வான்பரப்பு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தலால் மூடப்பட்டுள்ளது.
இதனால் சர்வதேச விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போர் சூழலால் வான்வழிப் பாதைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மாற்று ஏற்பாடாக நீண்ட தூரம் விமானம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தனது நாட்டு மக்களைப் பாதுகாப்பாக மீட்க கிரீஸ் அரசு சிறப்பு விமானங்களை இயக்கியுள்ளது.
இதன்மூலம் துபாய் மற்றும் தோஹாவிலிருந்து சுமார் 800 பேர் சிறப்பு விமானங்கள் மூலம் ஏதென்ஸ் நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.
விமானம் புறப்படுவதற்கு முன்பாக துபாய் மற்றும் தோஹாவில் அபாய ஒலி மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் கேட்டதாகப் பயணிகள் அச்சத்துடன் தெரிவித்தனர்.
















