தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அண்ணன் மகன்களின் காதணி விழாவுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சீர்வரிசை எடுத்து சென்ற பெண் அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
வடுகப்பட்டியை சேர்ந்தவர்கள் பாண்டியராஜன் – யுவஸ்ரீ தம்பதி. இவர்கள் தங்களின் மகன்களுக்கு காதணி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதனையடுத்து பாண்டியராஜனின் சகோதரியான பாண்டிசெல்வி, தனது மருமகன்களின் காதணி விழாவுக்கு சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு சீர்வரிசை பொருட்களுடன் சென்றார்.
கரகாட்டம், தேவராட்டம், குயிலாட்டம் உள்ளிட்ட நடனங்களுடன் மேளதாளம் முழங்க சீர்வரிசை பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
தென் மாவட்டங்களில் சகோதரி மகன், மகளின் சுப நிகழ்ச்சிகளுக்கு ஆட்டம், பாட்டத்துடன் தாய் மாமன் சீர்வரிசை வழங்குவது மிகவும் பிரபலம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக அத்தை தரப்பினர் லட்சக்கணக்கிலான மதிப்பில் சீர்வரிசை வழங்கியதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
















