சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஜுன் 19ம் தேதி, ஊரடங்கு விதிமுறைகளை மீறி தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாக இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 9 பேரும் தற்போது சிறையில் உள்ளனர். 105 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ., 3 மாதத்துக்குள் இரண்டு கட்டமாக 2 ஆயிரத்து 427 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
















