புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை நிறைவடைந்த நிலையில் மொத்தம் 2,140 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கேரளா,அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 9 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் , பணிகள் முழுமை அடைந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டமன்ற தொகுதிகளில் 789 வேட்பாளர்களும் , கேரளாவில் உள்ள 140 சட்டமன்ற தொகுதிகளில் 985 வேட்பாளர்களும் மற்றும் புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் 366 வேட்பாளர்களும் களத்தில் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி , கேரளா , அசாம் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 296 சட்டமன்ற தொகுதிகளில் 2,140 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு இன்று மாலை வரை அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
















