அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென பா.ஜ.க. நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பா.ஜ.க மையக்குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளிலும் பா.ஜ.க.வினர் தங்கள் தொகுதியாக நினைத்து களப்பணி ஆற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் சாதனைகளையும், திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளையும் மக்களிடம் வீடு வீடாகச் சென்று எடுத்துரைக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
















