- கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் மாதிரி அதிவேக ஈனுலை (PFBR) க்ரிட்டிக்காலிட்டி எனப்படும் உய்ய நிலையை அடைந்துள்ளது. உலக அணுசக்தித் துறையில் இந்தியா செய்துள்ள இந்த மகத்தான சாதனையை அடுத்து, ரஷ்யாவுக்குப் பிறகு, வணிக அளவிலான அதிவேக ஈணுலையை இயக்கும் உலகின் இரண்டாவது நாடாக இந்தியா மாறியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலக யுரேனியத்தில் வெறும் 2 சதவீதம் மட்டுமே இந்தியாவிடம் உள்ளது. ஆனால் உலகின் தோரியம் இருப்பில் ஏறக்குறைய 25 சதவீதத்தை இந்தியா தன்வசம் வைத்துள்ளது.
1950-களில் இந்தப் புவியியல் உண்மையை உணர்ந்த டாக்டர் ஹோமி பாபா இந்தியாவின் எரிசக்தி சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக, மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தார்.
முதலாவது கட்டம் வரையறுக்கப்பட்ட யுரேனியத்தை வழக்கமான அணு உலைகளில் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்தல் மற்றும் புளூட்டோனியத்தைப் பிரித்தெடுத்தல் என்பதாகும்.
இரண்டாவது கட்டம் அந்தப் புளூட்டோனியத்தை “ஃபாஸ்ட் பிரீடர்” அணு உலைகளில் பயன்படுத்தி, அதிக எரிபொருளை உருவாக்கி, தோரியத்தைப் பயன்படுத்தக்கூடிய யுரேனியம்-233 ஆக மாற்றுவதாகும். மூன்றாவது கட்டம் எதிர்கால அணு உலைகளை முழுவதுமாக தோரியத்தில் இயக்குவதாகும்.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் வணிக ரீதியான பிரீடர்களைக் கட்ட முயன்று, பின்னர் கைவிட்டு விட்டன.
டாக்டர் ஹோமி பாபா இத்திட்டத்தை வகுத்ததிலிருந்து சுமார் 72 ஆண்டுகள் கழித்து இப்போது இந்தியா வெற்றிகரமாக இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது.
7,700 கோடி ரூபாய் செலவில் இந்த அணு உலையைக் கட்டி முடிக்க சுமார் 22 ஆண்டுகள் ஆகியுள்ளது. இது 200-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) பங்களிப்புடன், பாவினி (BHAVINI) நிறுவனத்தால் முற்றிலும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கட்டப்பட்டுள்ளது. 100 சதவீதம் உள்நாட்டு தயாரிப்புகளால் மட்டுமே இந்த அணு உலை உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த சாந்தி சட்டம் இந்திய வரலாற்றில் முதன்முறையாக அணுசக்தித் துறையில் தனியார் துறைப் பங்களிப்புக்கு வழிவகுத்ததால் இது சாத்தியமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
பயன்படுத்தும் எரிபொருளை விட அதிக பிளவுபடும் எரிபொருளை உற்பத்தி செய்யும் வகையில் இந்த இந்த பிரீடர் அணு உலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அணு உலை முழுமையான 500 மெகாவாட் வணிக மின் உற்பத்திக்குத் தயாராகி வரும் நிலையில், இது மேம்பட்ட அணுசக்தித் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் சாதனையை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று கூறியுள்ள, கல்பாக்கத்தில் அமைந்துள்ள ‘இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின்’ (IGCAR) இயக்குனர் டாக்டர் ஸ்ரீகுமார் ஜி. பிள்ளை, ஒரு அணு உலையைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதை விட இது அதிகமான முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூன்றாம் கட்டத்துக்கான பாதையைத் திறந்திருப்பதன் மூலம், இந்தியா தனது பிரம்மாண்டமான தோரியம் இருப்பைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
மூன்றாவது கட்டமும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தவுடன், அடுத்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதற்கும் மின்சாரத்தை இந்த அணு உலை வழங்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் ஆறு 600 மெகாவாட் திறன் கொண்ட ஃபாஸ்ட் ப்ரீடர் அணு உலைகள் ஏற்கனவே மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளன.
8,180 மெகாவாட் என்ற இந்தியாவின் அணுசக்தித் திறனை 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் என அதிகரிக்க இலக்கு வைக்கப் பட்டுள்ளது. அடுத்து 2070-க்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கான ஒரு முதல் படிக்கல் இதுவாகும்.
தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு எரிசக்தி என்பது பிரச்சனை அல்ல. இது ஒரு தேசியப் பாதுகாப்பு நெருக்கடியாகும். இந்த அணுத்திறன் சாதனை மூலம் எரிசக்தி சுதந்திரத்தை அடைவதற்கு வேகமாக முன்னேறியுள்ளது.
















