தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்கித் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய் மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
முன்ஜாமின் மனு நீதிபதி லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, அன்பில் மகேஸ் தப்பிச் செல்ல மாட்டார், சாட்சிகளை கலைக்க மாட்டார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதால், கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் வாதிட்டார்.
அதே நேரத்தில், முன் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர், முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் தலைமறைவாக உள்ளதாக தெரிவித்தார்.
குற்றச்சாட்டுக்கள் தீவிரமானவை, நிதி மோசடி பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட வழக்கு என்றும் வாதிட்ட அரசு வழக்கறிஞர்,
400 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவதாகவும், அன்பில் மகேஸ்க்கு முன்ஜாமின் வழங்கினால் எதுவும் வெளிவராது என்றும் கூறினார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முத்துக்குமாரை, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தான் பாதுகாப்பதாகவும்,
அதனால், அன்பில் மகேஸை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்பில் மகேஸ் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
















