விஜயதசமியையொட்டி எடப்பாடியில் காலைக்கதிர் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பெற்றோர் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
விஜயதசமியையொட்டி காலைக்கதிர் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில் 2 முதல் 4 வயது குழந்தைகளுக்கான ‘அ’னா.. ‘ஆ’வன்னா… அரிச்சுவடி ஆரம்பம் என்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் சேனல் பார்ட்னராக ‘தமிழ் ஜனம்’ தொலைக்காட்சி பங்கெடுத்தது. காலைக்கதிர் செய்தி ஆசிரியர் ராமச்சந்திரன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய நிலையில், யுனிவர்சல் எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷன் தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
சங்ககிரி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், எடப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வித்யாரம்பம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
சரஸ்வதி தேவிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், பெரியவர்களின் ஆசியுடன் குழந்தைகள் நெல்மணியில் ‘அ’ என்ற முதல் எழுத்தை எழுதி கல்விப் பயணத்தைத் தொடங்கினர். இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
















