பொள்ளாச்சி – வால்பாறை மலைச்சாலையில் மண் சரிவுடன் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததால், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால், 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைச்சாலையின் 2 மற்றும் 3-வது வளைவுகளில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், இரண்டு ராட்சத பாறைகள் சாலையில் விழுந்ததால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வாகனங்கள் ஆழியார் சோதனைச் சாவடியிலும், வால்பாறையில் இருந்து வரும் வாகனங்கள் அட்டகட்டி பகுதியிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. வனவிலங்குகள் நடமாட்டத்தால் இரவில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில், காலையில் பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனை சார் ஆட்சியர் ராமசாமி நேரில் ஆய்வு செய்தார். சாலை சீரமைக்கப்படும் வரை வால்பாறைக்கான பயணத்தைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















