வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள சென்னையில் 220 சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் சராசரியாக 7.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகக் கூறினார். வளசரவாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் 10 சென்டிமீட்டர் வரை மழை பெய்துள்ளதாகவும், மழைநீரை வெளியேற்ற 137 மோட்டார்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், 22 சுரங்கப்பாதைகளில் மூன்றில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் முகத்துவாரங்களை ஒருங்கிணைத்து மேலாண்மை செய்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.
பொதுமக்கள் அதிகளவில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டார்.
















