ராமாயணம் மூலம் பெற்றோர் மற்றும் மனைவியிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ‘ராமாயணா – ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், ஏ.ஆர்.ரஹ்மான், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து ராமாயணா திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தனது நீண்டகாலக் கனவு நிறைவேறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தியா தாண்டி உலகம் முழுவதும் இசையால் மேஜிக் செய்யக்கூடிய நீங்கள் நிச்சயம் ஒரு நாள் இராமாயணத்திற்கு இசையமைப்பீர்கள் என நியூயார்க்கில் இருந்து 2014 ஆம் ஆண்டு சதீஷ் என்று ஒருவர் தெரிவித்திருந்தார். அது தற்பொழுது நிறைவேறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய நடிகை சாய் பல்லவி, உலகத் தரத்தில் ராமாயணத்தை உருவாக்கப் படக்குழுவினர் கடந்த 10 ஆண்டுகளாக உழைத்து வருவதாகவும், சீதையாக நடித்ததைப் பெருமையாகக் கருதுவதாகவும் தெரிவித்தார். மேலும், நடிகர் ரன்பீர் கபூர் தொடர்ந்து தமிழ்ப் படங்களைப் பார்த்து வருவதாகவும் கூறினார்.
பின்னர் பேசிய நடிகர் யாஷ், ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்தார். ராவணன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து பலர் கேள்வி எழுப்பியதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு நடிகர் அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
விழாவின் இறுதியில், ‘ராமாயணா’ திரைப்படத்தின் தமிழ்ப் பாடல்களுக்கான லோகோ வெளியிடப்பட்டது
















