சேலத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான 600 கிலோ வெள்ளிக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கார் உரிமையாளர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலத்தில் உள்ள வெள்ளிப் பட்டறையின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் 600 கிலோ வெள்ளியைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக செல்போன் சிக்னல்கள் மற்றும் கோபுரத் தரவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட காரைக் கோவையில் பறிமுதல் செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், 7 பேர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தற்போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் இருவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளியை மீட்கவும், திருச்சியில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளைச் சம்பவத்துடன் இவர்களுக்குத் தொடர்புள்ளதா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















