உலகளாவிய எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் இந்தியாவின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியாவை “சுத்திகரிப்பு வல்லரசு” என்று பாராட்டியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த மே மாதத்தில் வெனிசுலாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் வாடிக்கையாளராக இந்தியா இருந்தது; நாளொன்றுக்கு சுமார் 4,27,000 பேரல்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது.
வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியா தனது கொள்முதலை நிறுத்தியது.
கடந்த பிப்ரவரியில், வணிக ரீதியான சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் வெனிசுலா மற்றும் பிற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயைப் பெறுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக கூறிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எரிசக்தி விநியோகத்தைப் பன்முகப்படுத்துவது இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு உத்தியின் மையமாக உள்ளதாக தெரிவித்தார்.
வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தித் துறையிலும் முதலீடுகளைச் செய்துள்ள இந்தியா, அந்நாட்டின் அரசுக்குச் சொந்தமான ஓஎன்ஜிசி விதேஷ், சான் கிறிஸ்டோபல் எண்ணெய் வயலில் 40 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ளது. மேலும் கராபோபோ-1 திட்டத்தில் இந்திய நிறுவனங்கள் கூட்டாக 18 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ளன.
கடந்த ஆகஸ்டில், ஓஎன்ஜிசியின் நிதி இயக்குநர் அனுபம் அகர்வால், அந்நாட்டின் திருத்தப்பட்ட பெட்ரோலியச் சட்டத்தின் கீழ் வெனிசுலா எண்ணெய் தொகுதிகளை இயக்குவதற்கான ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து கடந்த செப்டம்பரில் வெனிசுலா தொடர்பான தனது எண்ணெய் உரிமங்களைத் திருத்திய அமெரிக்க கருவூலம், சுத்திகரிப்பு மற்றும் ஏற்றுமதி உட்பட வெனிசுலா கச்சா எண்ணெய் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கியது.
ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கும் முடிவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்காலிகமாக ரத்து செய்தார்.
இந்நிலையில் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, வெனிசுலா போன்ற நாடுகளில் இருந்து கிடைக்கும் அடர்த்தியான, கடினமான கச்சா எண்ணெயை மிகத் திறம்பட சுத்திகரிக்கும் தொழில்நுட்பமும் திறனும் இந்தியாவுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தைக்கு வெனிசுலாவின் கச்சா எண்ணெய் அதிகளவில் வரும்போது, அதனைச் சுத்திகரிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்றும், வெனிசுலாவில் இந்திய நிறுவனங்களுக்கு ஏற்கனவே எண்ணெய் எடுப்பதற்கான உரிமங்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து ஏற்கனவே இந்தியாவுடன் அமெரிக்கா பேசியுள்ளதாகவும், இதை செய்வதற்கு இந்தியா தயாராகவே உள்ளதாகவும் கூறிய ரூபியோ, அதே சமயம் பொருளாதாரத் தடைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகள் குறித்து இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா முறையாகப் பல்வகைப்படுத்தி வருவதைப் பாராட்டிய ரூபியோ, இது ஒரு “புத்திசாலித்தனமான நடவடிக்கை” என்றும் கூறியுள்ளார்.
















