எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பள்ளி கல்லூரிகளில் அதிகரிக்கும் சாதிய ரீதியிலான மோதல்கள் என சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நிறைந்த பகுதியாக திகழ்கிறது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதி. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்பட்ட பகுதி சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளின் புகழிடமாக மாறிவரும் நெல்லை மாவட்டம் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
ஏராளமான கல்லூரிகள், எண்ணிலடங்கா கல்வி நிறுவனங்கள் என தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என சொல்லும் அளவிற்கு இருந்த நெல்லை பாளையங்கோட்டை பகுதி, தற்போது கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், சாதிய மோதல் என ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளின் புகழிடமாக மாறிவருகிறது.
கடந்த ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சக மாணவர்களாலே தாக்குதலுக்குள்ளான மாணவர் சின்னதுரையில் தொடங்கி, கடந்த சில தினங்களுக்கு முன் புத்தகப் பையில் அரிவாளை கொண்டு வந்த மாணவன் வரை அடுத்தடுத்து அரங்கேறக்கூடிய நிகழ்வுகள் பதபதப்பை ஏற்படுத்துகின்றன.
அதிகளவிலான கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய பாளையங்கோட்டையில் தொடர்ந்து நடைபெறக்கூடிய சாதி ரீதியிலான மோதல் சம்பவங்கள் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.
பாளையங்கோட்டை பள்ளி ஒன்றில் மாணவரை ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய ஆசிரியர்கள், கல்லூரி மாணவியை மது அருந்த அழைத்த பேராசிரியர்கள் என மாணவர்களுக்கு நல்வழியை கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களே தவறான பாதைக்கு அழைக்கும் நிகழ்வுகள், பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பல வல்லுநர்கள், அறிஞர்கள், அரசியல் தலைவர்களை உருவாக்கிய நெல்லை மாவட்டம் தற்போது ஜாதி ரீதியிலான மோதல் சம்பவங்களை ஊக்குவித்து வருவது வேதனைக்குரியது என்கின்றனர் அம்மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள்
பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கிடையே நிலவும் மோதல் சம்பவங்களில் அரசியல் கட்சியினரின் தலையீடு அதிகளவில் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. பள்ளிகளுக்குள் அதிகரிக்கும் சாதிய, மோதல்களை அடியோடு தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே வருங்கால தலைமுறையை சிறந்த தலைமுறையாக உருவாக்க ஒரே தீர்வாக அமையும்.