முதலமைச்சரின் மருமகன் சபரீசனுக்காகவே தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாக அண்ணாமலை வைத்திருக்கும் குற்றச்சாட்டுத் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கும் முதலமைச்சரின் மருமகன் சபரீசனுக்கும் இடையிலான தொடர்பு குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளைகள் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் எனத் தமிழகம் முழுவதுமே அசாதாரண சூழலில் நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை 2025க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சத்தில் இருக்கும் நிலையில், அதனைக் களைவது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்வெளி தொழில் கொள்கை பின்னால் மறைந்திருக்கும் மர்மங்கள், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஆதாரங்கள் மூலம் வெளிவரத் தொடங்கியுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட வானம் ஸ்பேஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த நிறுவனத்திற்காக மட்டுமே இந்த விண்வெளிக் கொள்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார்.
ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்தோ தொழில் நுட்பம் சார்ந்தோ எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளாத தமிழக அரசு, சபரீசன் தனி நிறுவனத்தைத் தொடங்கிய பின்னர் அவசர கதியில் தொழில் கொள்கையை வெளியிடுவதும், அதற்குப் பல சலுகைகளை அறிவிப்பதும் அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணங்கள், சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டு என பல்வேறு வழிகளின் மூலம் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் முதலீடுகளும், அதன் மூலம் உருவாகும் எனச் சொல்லப்பட்ட வேலைவாய்ப்புகளும் பகல் கனவாக மாறியிருக்கும் நிலையில் தற்போது விண்வெளித்துறையில் பத்தாயிரம் கோடி முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்ணயித்திருப்பதாகக் கூறுவது பொதுமக்களை ஏமாற்றும் செயலாகவே பார்க்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
முதலமைச்சரின் மருமகனின் நிறுவனத்திற்காக அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தித் தனி கொள்கையை வகுத்திருப்பதன் மூலம் முதலமைச்சரின் குடும்பம் தமிழகத்தை தன் குடும்ப சொத்தாகக் கருதுகிறதோ என்ற ஐயமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்திருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சரித்திரமிக்க சாதனைகளைப் படைத்து வரும் இந்தியா, வளர்ந்த பல நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சி நிலையம், விண்வெளிக்குச் சுற்றுலா என அடுத்தடுத்த மைல்கல்லை இந்தியா எட்ட மத்திய அரசு எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சரின் குடும்பத்தினருக்காக மட்டுமே ஒரு புதிய தொழில் கொள்கையை உருவாக்கியிருக்கும் திமுக அரசின் செயல்பாடு ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.