பாரத நாடின்றி உலகளவில் இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சேவுகமூர்த்தி கோசாலை அறக்கட்டளை சார்பில் 10ஆம் ஆண்டு அபிவிருத்தி திட்ட துவக்கவிழா மற்றும் யாகவேள்வி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். முன்னதாக கோ பூஜையில் பங்கேற்றதுடன் விவசாய கண்காட்சியையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து விழா மேடையில் பேசிய அவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாட்டிற்கு உலகளவில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
பிற நாடுகள் கூறுவதைக் கேட்கும் நிலையில் இருந்த பாரத நாடு இன்று பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாகத் தெரிவித்தார்.
போராக இருந்தாலும் சரி, வளர்ச்சி பற்றியதாக இருந்தாலும் சரி, பாரத நாட்டின் கருத்து உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுவதாக ஆளுநர் ரவி பெருமிதம் தெரிவித்தார்.