மதுரை மாநகராட்சி மேயரை தேர்வு செய்வது தள்ளிப் போவதால், திட்டப் பணிகள் முடங்கிப் போய், மாநகரத்தில் எந்தப் பணிகளும் முழுமையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரையின் முக்கியப் பிரச்சனையாகச் சுகாதாரக் கேடு உருவெடுத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
அண்மையில் சொத்து வரி வசூலில் 200 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது வெட்ட வெளிச்சமானதால், மத்திய குற்றப்பிரிவு தனது பிடியை இறுக்கியது. மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன்.வசந்த். மண்டல தலைவர் கணவர் கண்ணன், உதவி ஆணையர் உள்ளிட்ட 23 பேரை கைது செய்யப்பட்டனர். மாநகராட்சியின் நிரந்தர அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் எனக் கைதானவர்களில் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனம் காரணமாக ஐந்து மண்டல தலைவர்கள், இரண்டு குழுத் தலைவர்கள் ராஜினாமா.
மாநகராட்சி மேயர் இந்திராணி பதவி விலகினார். நிலைமை இப்படியிருக்க ஒரு மாதத்தைக் கடந்தும் புதிய மேயரை தேர்வு செய்யாதது மதுரை மாநகராட்சி பணிகளை முடக்கியுள்ளது. புதிய மேயர் தேர்வு தள்ளிப் போவதால் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலைப் பணிகள், குடிநீர், கழிவுநீர், குப்பைகள் அகற்றும் பணிகள், புதிய திட்டங்கள் செயல்படுத்துதல் என எதுவும் நடைபெறவில்லை.
குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே தேங்கிக் கிடப்பதால், சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாகக் குமுறுகிறார்கள் உள்ளூர்வாசிகள்… தூங்கா நகரம், கோவில் மாநகரம், திருவிழா நகரம் கலாசார நகரம் எனப் பல்வேறு சிறப்புகளை பெற்ற மதுரை மாநகரம் தற்போது குப்பை மாநகரம் மாறி விட்டதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் மதுரைவாசிகள்.
அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி உள்ளிட்டோர் தங்களுக்கு ஆதரவான ஒரு நபரை மேயராகத் தேர்வு செய்யுமாறு வலியுறுத்தி வரும் நிலையில், திமுகவுக்குள் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடி வருகிறது.
எனவே புதிய மேயரை உடனடியாகத் தேர்வு செய்து, சுகாதார சீர்கேட்டைக் களைய தமிழக அரசும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மதுரை மக்களின் கோரிக்கையாக உள்ளது.
















