இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சியின் வரி சீர்திருத்தங்கள் மற்றும் அதிகரித்து வரும் வரிகள் காரணமாக, பெரும்பாலான பெரும் பணக்காரர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அந்த வரிசையில், உலகின் பெரும் பணக்காரத் தொழிலதிபர்களில் ஒருவரும் ஸ்டீல் கிங் என்று புகழப்படும் லட்சுமி மிட்டல், பிரிட்டனை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகளவில் ஐந்தாவது பெரிய கோடீஸ்வரர்களின் மக்கள் தொகையைக் கொண்ட பிரிட்டன், கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையில் கணிசமான சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டின் ஒரு பகுதியாக உள்நாட்டு அல்லாத வரி நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதாக தொழிலாளர் கட்சியின் ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்தார். மேலும் தொழிலதிபர்களுக்கு வரிகளை உயர்த்தியதோடு, குடும்ப தொழிலை வாரிசுகளுக்கு ஒப்படைத்தால், வாரிசு வரி எனப் பல்வேறு புதிய வரிகளையும் பிரிட்டன் அரசு அமல் படுத்தியது.
வெளிநாட்டு வருமானத்துக்கான இங்கிலாந்து வரியைத் தவிர்க்க அனுமதிக்கப்பட்ட குடியேறாதவர்களுக்கான முன்னுரிமை வரி முறையையும் பிரிட்டன் அரசு ரத்து செய்துள்ளது. 226 ஆண்டுகளாக இந்த வரி விதிப்பு முறை நீடித்து வந்தது. அதன்படி, இந்த வரி சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்த பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவில் 691 மில்லியனர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட 79 சதவீதம் அதிகமாகும். இங்கிலாந்தின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான நார்வே நாட்டைச் சேர்ந்த கப்பல் போக்குவரத்து அதிபர் ஜான் ஃப்ரெக்சன், பிரிட்டன் நரகத்துக்குச் சென்று விட்டது என்று கூறியிருந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடைய இவர், இங்கிலாந்தை விட்டு வெளியேறி ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார்.
இந்த ஆண்டு மட்டும் 16 ஆயிரத்து 500 மில்லியனர்கள் பிரிட்டனை விட்டு வெளியேறுவார்கள் என்று குடியிருப்பு மற்றும் குடியுரிமை ஆலோசனை நிறுவனமான ஹென்லி கணித்துள்ளது. இது வேறு எந்த நாட்டை விடவும் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், உலகின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவரான லட்சுமி மிட்டல், இங்கிலாந்தை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
உலகின் இரண்டாவது பெரிய ஸ்டீல் உற்பத்தியாளரான, இந்தியாவின் ராஜஸ்தானில் பிறந்த லட்சுமி மிட்டல், 1995 ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் குடியேறினார். ஆர்செலர் மிட்டலில் 40 சதவீத பங்குகளை சொந்தமாக வைத்துள்ள அவரும் அவரது குடும்பத்தினரும் கடந்த ஆண்டு பிரிட்டனின் பணக்காரர்களின் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளனர்.
60க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வரும் ‘ஆர்சிலோர் மிட்டல்’ உருக்கு ஆலையின் தற்போதைய சந்தை மதிப்பு 1.20 லட்சம் கோடி ரூபாய் ஆகும். உலகின் 12வது பணக்கார இந்தியர் மற்றும் உலகின் 104வது பணக்காரரான மிட்டலுக்கு இங்கிலாந்து வீட்டைத் தவிர,. “பில்லியனர்ஸ் ரோ” என்று அழைக்கப்படும் கென்சிங்டன் பேலஸ் கார்டனில் உள்ள அவரது சொத்துக்கள், பிரிட்டனின் மிகவும் விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாகும். 2004ம் ஆண்டு £57 மில்லியனுக்கு வாங்கப்பட்ட இந்த மாளிகை “தாஜ் மிட்டல்” என்று அழைக்கப்படுகிறது.
55,000 சதுர அடி பரப்பளவுள்ள இந்த மாளிகை, தாஜ்மஹால் கட்ட பயன்படுத்தப்பட்ட அதே குவாரியில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட பளிங்குக் கற்களால் கட்டப் பட்டுள்ளது. சுவிஸ் ரிசார்ட் நகரமான செயிண்ட் மோரிட்ஸில் மற்றும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவில் மிட்டலுக்கு பிற சொத்துக்கள் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்செலர் மிட்டலின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகிய 74 வயதான மிட்டல், தனது மகன் ஆதித்யா மிட்டலுக்கு அந்தப் பதவியைக் கொடுத்துள்ளார். இங்கிலாந்தை விட்டு வெளியேறும் பெரும் பணக்காரர்கள், துபாய், இத்தாலி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்குப் குடி பெயர்கிறார்கள்.
லட்சுமி மிட்டலும், “துபாயின் பெவர்லி ஹில்ஸ்” என்று அழைக்கப்படும் பகுதியில் அரண்மனை வீட்டை வாங்கியுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் லட்சுமி மிட்டல் இங்கிலாந்தை விட்டு வெளியேறும் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனை விட்டு வெளியேறும் பணக்காரத் தொழிலதிபர்கள் பட்டியலில், முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரர் (Rio Ferdinand) ரியோ ஃபெர்டினாண்ட் மற்றும் Revolut நிறுவன இணை நிறுவனர் (Nik Storonsky) நிக் ஸ்டோரோன்ஸ்கி, எகிப்து தொழிலதிபர் Nassef Sawiris, கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் Richard Gnodde ரிச்சர்ட் க்னோட் ஆகியோர் உள்ளனர்.
நாட்டின் செல்வத்தைக் கட்டியெழுப்பும் உலகின் பெரும் பணக்காரத் தொழிலதிபர்களும் தொழில் முதலீட்டாளர்களும் இங்கிலாந்தை விட்டு வெளியேறுவது ஆபத்தான எச்சரிக்கை என்று கூறப்படுகிறது.
















