அயோத்தி ராமர் கோயிலில் ஏற்றப்பட்ட காவிக்கொடி பாரத்தின் கலாசார அடையாளம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்தபிறகு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ராமர் கோயில் கொடியேற்ற விழாவையொட்டி பாரத தேசமும், உலகமும் ராமரின் பக்தியில் மூழ்கியுள்ளது எனக் கூறினார்.
அயோத்தியில் காவிக்கொடி ஏற்றியது வரலாற்று சிறப்பு மிக்கது எனக்கூறிய பிரதமர், இது கொடி அல்ல, பாரதத்தின் கலாசார அடையாளம் எனத் தெரிவித்தார்.
வாய்மையே வெல்லும் என்பதை ராமர் கொடி காட்டுகிறது எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, காவிக்கொடி ஒற்றுமையையும், தெய்வீகத்தையும் விளக்குகிறது எனச் சுட்டிக்காட்டினார்.
21ஆம் நூற்றாண்டில் அயோத்தி மனிதகுலத்திற்கு புதிய வளர்ச்சியை வழங்கி வருகிறது என்றும், தற்போது அயோத்தியின் வளர்ச்சி பாரத்திற்கு முதுகெலும்பாக உள்ளது எனவும் கூறினார்.
மேலும், ராமர் கோயில் கட்டுமான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள், தொழிலாளர்கள், பட்டியலின மக்கள் என அனைத்து பிரிவினரும் வளர்ச்சியடைந்துள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, 2047ஆம் ஆண்டுக்குள் அனைவரின் முயற்சிகளாலும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவோம் எனத் தெரிவித்தார்.
















