விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜினாமா செய்தாா்.
இதனைதொடர்ந்து பட்டினம்பாக்கத்தில் விஜய்யை சந்தித்து செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில், பனையூரில் நடைபெற்ற நிகழ்வில், விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் எம்.பி சத்யபாமா உட்பட ஆதரவாளர்கள் பலரும் தவெகவில் இணைந்துள்ளனர்.
அப்போது சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்துச் செங்கோட்டையனை விஜய் வரவேற்றார்.
மேலும், செங்கோட்டையனுக்கு, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என நான்கு மாவட்ட தவெக அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், தலைமை நிர்வாகக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக அவர் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து தவெகவில் இணைந்த செங்கோட்டையனை வரவேற்கும் விதமாக நடிகர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், சின்ன வயதிலேயே எம்எல்ஏ என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர் செங்கோட்டையன் என்றும், இருபெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைகுரியவராக அரசியல் களத்தில் இருந்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.
















