ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், விக்ரம்-1 என்ற நாட்டின் முதல் தனியார் ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இதனை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, நமது நாட்டின் தனியார் விண்வெளி புரட்சிக்கு ஒரு அதிகாரபூர்வ தொடக்கத்தை அறிவித்துள்ளார்.
விக்ரம்-1 என்ற நாட்டின் முதல் தனியார் ராக்கெட்டை உருவாக்கியதன் மூலம் இந்தியா விண்வெளித்துறையில் புதிய வரலாறு படைத்துள்ளது. தெலங்கானாவின் ஹைதராபாத் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம்தான் இந்த MULTI STAGE ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.
2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை, விஞ்ஞானிகளான பவன் குமார் சந்தனா மற்றும் நாக பாரத் டாகா ஆகியோர் இணைந்து நிறுவினர். இவ்விருவரும் முன்பு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் பணியாற்றியிருந்தனர். குறிப்பாகப் பவன் குமார் சந்தனா இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட்டான GSLV Mk-3 திட்டத்தில் சுமார் ஐந்து ஆண்டுகள்வரை பணியாற்றியுள்ளார்.
அதேபோல, நாக பாரத் டாகாவும், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் FLIGHT COMPUTER ENGINEER ஆகப் பணியாற்றி வந்தார். ராக்கெட் ஏவுதலில் வழிநடத்தல், கட்டுப்பாடு போன்ற முக்கிய செயல்பாடுகளை மேற்கொள்ளும் கணினி வன்பொருள் மற்றும் firmware அமைப்புகளை உருவாக்கிய அனுபவமும் இவருக்கு உண்டு. ஏழு மாடிக் கட்டடத்தின் உயரம் கொண்ட விக்ரம்-1 ராக்கெட், சுமார் 300 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை தாழ்வான பூமியின் வட்டப்பாதையில் செலுத்தும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விக்ரம்-1 ராக்கெட்டையும், ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கைரூட் நிறுவனத்தின் INFINITY CAMPUS-ஐயும் பிரதமர் மோடி திறந்து வைத்து உரையாற்றினார். குறிப்பாகச் சிறிய செயற்கைக்கோள்களின் தேவைகள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்கள் சிறப்பாக முன்னேறி வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், உலகளவில் இந்தியாவின் தனியார் விண்வெளி திறமைகள் தனித்த அடையாளம் பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்திய விண்வெளித்துறை இதன் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்கும் மையமாக மாறி வருவதாகவும் கூறினார். இந்திய இளைஞர்கள் அதிலும் குறிப்பாக GEN-Z தலைமுறை, தேசிய நலனை முதன்மையாகக் கொண்டு விண்வெளி துறையில் கால்பதித்துள்ளதாகப் பாராட்டிய பிரதமர் மோடி, விண்வெளி துறையை தனியாருக்கு திறந்தபின் பல இளைஞர்கள் சிறந்த முறையில் அதனை பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், தற்போது 300-க்கும் அதிகமான START-UP நிறுவனங்கள் இந்தியாவின் விண்வெளி எதிர்காலத்திற்கு புதிய நம்பிக்கை அளித்து வருவதாகவும், இருவர், ஐந்து பேர் எனச் சிறிய குழுக்களாகக் குறைந்த வசதிகளோடு, பெரிய கனவுகளை துரத்திப்பிடிக்க அவர்கள் கடினமாக உழைத்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். அவர்களின் இந்த உற்சாகமே இந்தியாவின் தனியார் விண்வெளி புரட்சிக்கு காரணம் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாய் அவர்களின் பெயரால் அழைக்கப்படும் இந்த விக்ரம்-1 ராக்கெட், கார்பன் ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் பல செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் பூமியின் வட்டப்பாதையில் செலுத்தும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட திரவ எரிவாயு இயந்திரங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ஸ்கைரூட் நிறுவனத்தின் தகவல்களின்படி இந்த ராக்கெட்டை எந்த ஏவுதளத்திலிருந்தும் 24 மணி நேரத்திற்குள் ஏவமுடியும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு மிக வேகமான விண்வெளி அணுகலை வழங்கும் திறன் இதற்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் ஒட்டுமொத்தமாக வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை ஏவும் திறன்கொண்ட மிகச் சில தனியார் ராக்கெட்டுகளில் விக்ரம்-1 முக்கிய இடம் பெறும் என்றும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம்-1 ராக்கெட்டின் பல்வேறு நிலைகள் நாட்டின் பல சோதனை மையங்களில் பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு பிற்பகுதியில் விக்ரம்-1 விண்வெளியில் ஏவப்படும் என ஸ்கைரூட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பரிசோதிக்கப்பட்டு வரும் ராக்கெட்டின் அனைத்து நிலைகளையும் விரைவில் ஒருங்கிணைத்து, ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளிக்கு ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்கைரூட் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு இந்த நிறுவனம் விக்ரம்-S என்ற ராக்கெட்டை துணை வட்டப்பாதையில் வெற்றிகரமாக ஏவியிருந்தது. அந்த ராக்கெட் சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ், ஆந்திராவைச் சேர்ந்த என்-ஸ்பேஸ்டெக் மற்றும் அர்மேனியாவின் பசூம் Q ஸ்பேஸ் ரிசர்ச் லேப் ஆகிய நிறுவனங்களின் மூன்று வெவ்வேறு சுமைகளை ஏற்றி சென்றது. இந்த வகையில், இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையை உலக அரங்கில் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லக்கூடிய முக்கிய மைல் கல்லாக விக்ரம்-1 ராக்கெட் உருவெடுத்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
















