துபாயில் சிறைபிடிக்கப்பட்ட முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியின் நிலை தொடர்ந்து ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சகோதரி உதவிகோரி அரசு மற்றும் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த விவகாரம் ஐக்கிய அரபு அமீரக அரசின், தேசிய பாதுகாப்பு விசாரணையில் ஒளிந்திருக்கும் இருள்சூழ்ந்த நடைமுறைகளை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…
இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரியான மேஜர் விக்ராந்த் ஜெட்லி, கடந்த 2016-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீகரகத்திற்கு தனது மனைவி சாருலுடன் குடிபெயர்ந்தார். துபாயில் வசித்து வந்த அவர்கள், ‘மிதிதி’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி, மனித வள மேம்பாடு, தொழில் சார்ந்த புலனாய்வு போன்ற துறைகளில் சேவைகள் வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி, அவர் தனது மனைவியுடன் ‘MALL OF THE EMIRATES’ வணிக வளாகத்தின் பார்க்கிங் பகுதியில் தங்கள் காரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது முகத்தை மூடியபடி கருப்பு உடையில் அவர்களை அணுகிய இருவர் சாருலை மிரட்டி அப்புறப்படுத்திவிட்டு, விக்ராந்தை வலுக்கட்டாயமாகப் பிடித்து கருப்பு நிற SUV காரில் அழைத்துச் சென்றனர்.
இதுவே மேஜர் விக்ராந்த் பொதுவெளியில் தென்பட்ட கடைசி முறை எனச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு, மேஜர் விக்ராந்த் ஜெட்லி குறித்த எந்தவொரு தகவல்களும் வெளியிடப்படாமல் இருந்து வருகின்றன. இது ஐக்கிய அரபு அமீரக அரசில் உள்ள ரகசிய காவல்துறையினர் மேற்கொள்ளும், “பிளாக் பாக்ஸ்” வகை தடுப்பு காவல் நடவடிக்கை எனப் பாதுகாப்புத்துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே மேஜர் விக்ராந்த் ஜெட்லியின் சகோதரியும், நடிகையுமான செலினா ஜெட்லி, தனது சகோதரர் எந்தக் குற்றச்சாட்டின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது பற்றி, இதுவரை எந்த விவரங்களும் அளிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசின் தலையீட்டை கோரி வரும் அவர், தனது சகோதரரின் நிலை, சட்ட உதவி மற்றும் தூதரக நடவடிக்கைகள் குறித்து அறிய டெல்லி உயர்நீதிமன்றத்தையும் நாடியுள்ளார்.
தற்போது 43 வயதாகும் மேஜர் விக்ராந்த் ஜெட்லி மீது எந்த குற்றச்சாட்டும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அவர் அபுதாபியில் உள்ள அல் வத்பா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மிகுந்த ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இது ஒரு தேசிய பாதுகாப்பு சார்ந்த உணர்வுப்பூர்வமான விவகாரமாக இருக்கலாம் என விவரம் அறிந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இதுபோன்ற சமயங்களில் மற்ற நாடுகளுடன் தகவல்களை பகிராமல், ஐக்கிய அரபு அமீரகம் தாமாக விசாரணையை நடத்தி முடிக்க விரும்பும் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கு முன், கத்தாரிலும் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் உளவுத்துறை சார்ந்த குற்றச்சாட்டில், தடுப்பு காவலில் வைக்கப்பட்ட விவகாரத்திலும் இவ்வாறான ரகசிய நடைமுறைகள் காணப்பட்டன. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பிறகே அது தொடர்பான விவரங்கள் வெளிவந்தன. இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி, ரக்ஷாபந்தன் தினத்தன்றுதான் தனது சகோதரருடன் கடைசியாக பேசியதாக நடிகை செலினா ஜெட்லி தெரிவித்துள்ளார். தனது சகோதரர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள விவரங்கள் 3 வாரங்கள் கழித்தே தங்களுக்கு தெரியவந்ததாகக் கூறும் செலினா, அரசு தரப்பில் இதுகுறித்து தெளிவான பதில்கள் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய இந்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், துபாயிலுள்ள இந்திய தூதரகமும் மேஜர் விக்ராந்த் ஜெட்லியை அணுகி 4 முறை பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேஜர் விக்ராந்த் ஜெட்லி மட்டுமின்றி இந்திய ராணுவம் மற்றும் சைபர் பாதுகாப்பு, சைபர் அச்சுறுத்தல் ஆய்வு போன்ற ரகசிய புலனாய்வுத் துறைகளைச் சேர்ந்த பலர், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் ரகசியமாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் பின்புலம் கொண்ட சைபர் நுண்ணறிவு நிபுணர் ஆண்ட்ரூ க்ரூன்ஸ்டீன், இந்திய ராணுவத்தின் முன்னாள் லெஃப்டினன்ட் கர்னல் பிரயான் மிராண்டா ஆகியோர் இந்த பட்டியலில் அடங்குவர். இந்நிலையில், மிராண்டா மற்றும் ஜெட்லி ஒரே தொழில்துறையில் இணைந்து பணியாற்றியிருக்கலாம் என பாதுகாப்புத் துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவ்வாறான சூழலில், விக்ராந்த் ஜெட்லியின் நீண்டகால கைது நடவடிக்கை குறித்து, இந்திய அரசு மேற்கொண்டு வரும் தூதரக முயற்சிகள் மட்டுமே அவரது குடும்பத்தாருக்கு நம்பிக்கை அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
















