நாடு முழுவதும் கடந்த நான்கு நாட்களில் 1000க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பயணிகளுக்கு முழு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான உரிமையும் வாய்ப்பும் உள்ளதா ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நாட்டின் மிகப் பெரிய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ விமானங்களில் ஆண்டுக்குச் சுமார் 10 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். கடந்த நான்கு நாட்களாக இந்நிறுவனத்தின் விமானச் சேவையில் பிரச்சனை ஏற்பட்டு அதன் செயல்திறன் முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இதனால், நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சுழலில் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி யுள்ளனர். பாதிக்கப்பட்ட வாடிக்கையளர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ள இண்டிகோ நிறுவனத்திடம் கட்டணத்தைத் திரும்பப் பெற முடியுமா ? என்ற கேள்வி பயணிகளிடம் உள்ளது. இந்திய அரசின் சட்ட விதிகள் பயணிகளுக்கான உரிமை மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்திருக்கிறது.
அதன்படி, ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டால், விமான நிறுவனங்கள் முழு பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் அல்லது மாற்று விமானத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும்.
ரத்து செய்யப்படும்போது நேரத்தில் பயணிகள் விமான நிலையத்தில் இருந்தால், அடுத்த விமானம் வரும் வரைக்கும் குறிப்பிட்ட விமான நிறுவனமே பயணிகளுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஒரு விமான நிறுவனம் விமானத்தை ரத்து செய்து, புறப்படுவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்துக்கு முன் பயணிகளுக்குத் தெரிவிக்கவில்லை என்றால், DGCA விதிகளின் படி, இழப்பீடு வழங்க வேண்டும். பல மணி நேரங்களுக்கு மேல் தாமதமாகும் நிலையில், ஹோட்டல்களில் தங்குமிடம் மற்றும் போக்குவரத்துக்கும் விமான நிறுவனமே வசதி செய்து தர வேண்டும்.
இதனடிப்படையில்ல இண்டிகோ PLAN B என்ற திட்டத்தை வைத்துள்ளது. அதாவது விமானம் ரத்து செய்யப்படும்போதும், இரண்டு மணிநேரத்துக்கு மேல் விமானம் தாமதமாகும் போதும், PLAN B நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் படி, கூடுதல் செலவு இல்லாமல் விமானப் பயணத்தை மற்றொரு நாளில் மற்றொரு நேரத்துக்கு மீண்டும் முன்பதிவு செய்யலாம் என்றும், இல்லையென்றால், ஏற்கெனவே செய்திருந்த முன்பதிவை முழுவதுமாக ரத்துசெய்துவிட்டு, நிறுவனத்திடம் இருந்து முழு பணத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PLAN B-யின் கீழ் பயணிகள் தங்கள் விருப்பதைத் தேர்வு செய்ய எந்தவிதமான கூடுதல் கட்டணங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இண்டிகோவின் அதிகாரப் பூர்வ இணையத்தளத்துக்குச் சென்று PNR எண்ணைக் குறிப்பிட்டுக் கட்டணப் பணத்தைத் திரும்பப் பெற முடியும். travel agent மூலம் முன்பதிவு செய்திருந்தால், அவர்கள் மூலம் பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
இதற்கிடையே, பயணிகளுக்குக் கட்டணத் தொகையை முழுமையாகத் திருப்பித் தரப்படும் என்றும், மேலும் டிசம்பர் 5ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டதற்கும் வேறு நாளுக்கு மாற்றியதற்கும் எந்தவித கட்டணமும் இல்லாமல் முழு விலக்கு அளிக்கப்படும் என்றும் இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
















