கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் திலீப் குற்றமற்றவர் என எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி குறித்து விரிவாக விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி, பிரபல நடிகை ஒருவரை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று நடிகை தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது, காரை வழிமறித்து உள்ளே நுழைந்த நபர்கள் அவரைப் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் காரில் இருந்து அவர்கள் தப்பிச் சென்றதையடுத்து, பாதிக்கப்பட்ட நடிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த நடிகை அளித்த வாக்குமூலம் மற்றும் கேரள போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், பல்சர் சுனி என்னும் சுனில் முக்கிய குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். தொடர் விசாரணையில் மார்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ், சலீம் மற்றும் பிரதீப் ஆகியோர் குற்றவாளிகள் பட்டியலில் கூடுதலாக இணைக்கப்பட்டனர்.
அத்துடன், இந்தச் சம்பவத்தைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்ததாகப் பிரபல மலையாள நடிகர் திலீப் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு தொடர்பான விசாரணை, சாட்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மிகவும் சிக்கலான முறையில் நடைபெற்றது. மொத்தமாக 261 பேர் இந்த வழக்கில் சாட்சியமளித்தனர். பின்னர் அதில் 28 பேர் பிறழ் சாட்சிங்களாக மாறினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, இருமுறை முக்கிய வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டதுடன், சில முக்கிய சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் சரியாகப் பரிசோதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் 833 ஆவணங்கள் மற்றும் 142 பொருட்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன. அதேபோல, எதிர்மனுதாரர் தரப்பிலும் 221 ஆவணங்கள் ஆதாரங்களாகச் சமர்பிக்கப்பட்டன.
அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்து, சாட்சி விசாரணைகளை மேற்கொள்ள 438 நாட்கள் தேவைப்பட்டது. இதனால், பல ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நீடித்தது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நீதிமன்றமும் பல சட்டமுறை சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின் தற்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நடிகர் திலீபை, குற்றமற்றவர் எனக்கூறி வழக்கிலிருந்து விடுவித்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வழக்கின் ஆவணங்களில் உள்ள சிக்கல்கள், முக்கிய சாட்சிகளின் மாற்றம் போன்றவற்றால், திலீப் மீதான குற்றத்தை நிரூபிக்க மனுதாரர் தரப்பு தவறிவிட்டதாக நீதிமன்றம் விளக்கமளித்தது. அதே நேரத்தில், இந்த வழக்கில் நேரடி தொடர்புடைய பல்சர் சுனி, மார்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ், சலீம் மற்றும் பிரதீப் ஆகிய 6 பேரை நீதிமன்றம் குற்றவாளிகள் என அறிவித்தது.
அவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 12-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் திலீப், இது தனக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் சதி எனத் தெரிவித்தார். மலையாள திரையுலகில் பெண்களின் பாதுகாப்பு, பாலியல் அத்துமீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றின் மீது பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த வழக்கில், பல்வேறு சர்ச்சைகள் மற்றும் குழப்பங்களுக்குப் பின் எர்ணாகுளம் நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது, தேசிய அளவில் நீண்டகால விவாதங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















