ஆண்களின் நீண்டகால பிரச்னையாக உள்ள தலைமுடி வழுக்கைக்கு அயர்லாந்து தனியார் நிறுவனம் ஒரு நிரந்தர தீர்வை கண்டுபிடித்துள்ளது. பலர் ஆர்வத்துடன் எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் அந்தத் தீர்வு என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.
உலகளவில் பெருவாரியான ஆண்களுக்கு Androgenic alopecia என்னும் தலைமுடி வழுக்கை என்பது நீண்டகால பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பொதுவாக 20 முதல் 30 வயதில் ஆண்களுக்கு ஆரம்பமாகும் இந்தப் பிரச்னை, முதலில் தலையோரங்களில் தொடங்கி நாளடைவில் தலைமுடி வரிசையை ‘M’ அல்லது ‘U’ வடிவில் குறைக்கிறது.
இதன்மூலம் இறுதியாகத் தலையின் மேற்பகுதி முழுவதும் முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை என்னும் நிலையை அடைகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண இதற்கு முன் பல நிறுவனங்கள் பல்வேறு மருந்துகளை கண்டுபிடித்து அவற்றை சந்தைப்படுத்தியுள்ளன. இருப்பினும் அந்த மருந்துகள் எதுவும், இந்த பிரச்னைக்கு பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இந்தச் சூழலில், அயர்லாந்தைச் சேர்ந்த Cosmo Pharmaceuticals என்ற தனியார் நிறுவனம், இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
இதற்கான ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அந்த நிறுவனம், ஆக்னே சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் ‘Glascotteron’ மருந்தைத் தலைமுடி வளர்ச்சிக்கான தங்களது ஆய்வில் பயன்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆய்வில் சுமார் ஆயிரத்து 500 ஆண்களை இரு குழுக்களாகப் பிரித்துக்கொண்ட அந்நிறுவனம், அவர்களிடம் மூன்று கட்டங்களாக இந்தப் பரிசோதனையை மேற்கொண்டது.
இந்தப் பரிசோதனையின்போது ஒரு குழுவினருக்கு எப்போதும் வழங்கப்படும் சாதாரண சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்னொரு குழுவினருக்கு ‘Glascotteron’ மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை வழங்கப்பட்டது. பரிசோதனைகளின் முடிவில் ‘Glascotteron’ மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்ட குழுவினர், 168 சதவீதம் முதல் 539 சதவீதம் வரை தலைமுடி வளர்ச்சி பெற்றிருந்தனர்.
மேலும், இந்த மருந்தைப் பயன்படுத்திய குழுவினருக்கு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், அவர்களின் உடல்நிலை மருந்தைச் சீரான முறையில் ஏற்றுக்கொண்டதாகவும் Cosmo Pharmaceuticals நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மருந்து தொடர்ந்து வேலை செய்தால், ஆண்களின் தலைமுடி வழுக்கை பிரச்னைக்கு இது நிரந்தர தீர்வாக அமையும் என Cosmo Pharmaceuticals நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜியோவானி டி நபோலி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துக்கு வரும் ஆண்டில் அமெரிக்காவின் FDA அமைப்பு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், இது ஆண்களின் தலைமுடி வழுக்கை பிரச்னைக்குக் கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட புதிய மருந்தாக இருக்கும் எனத் துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து தலைமுடி வழுக்கையால் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்தில் உள்ள பல ஆண்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
















