அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவைச் சந்தித்திருக்கும் நிலையில், சில சாதகமான சூழல்களும் உருவாகியிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அவை என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரானது 90 ரூபாய் 50 காசுகள் என்ற சூழல் உருவாகியிருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இந்தியா – அமெரிக்கா இடையே நிலவும் வர்த்தக முரண்பாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டில் மட்டும் ரூபாயின் மதிப்பு 6 சதவீதம் வீழ்ச்சி கண்டிருக்கிறது. டாலருக்கும், ரூபாய்க்கும் இடையிலான மதிப்பை இந்தியா அல்லது அமெரிக்க அரசுகள் நேரடியாக நிர்ணயிப்பதில்லை. அது முழுக்க முழுக்க சந்தையின் தேவை வழங்கல் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படுகிறது.
அதாவது டாலரை அதிகமாக வாங்கினால், அதன் விலை உயரும், குறைவாக வாங்கினால் விலை குறையும். இந்தப் பரிவர்த்தனை நடைபெறும் இடமான FOREX-ல், இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்து, 24 மணி நேரமும் விற்பனையை கண்காணித்து வருகின்றன.
இதன் அடிப்படையில் தான் ஒரு டாலர் எத்தனை ரூபாய் என்ற மதிப்பு ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டே இருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்று டாலராக மாற்றினால் ரூபாய் பலவீனமாகும். அதேவேளையில் இந்தியாவில் முதலீடு செய்ய டாலரை மாற்றி ரூபாய் வாங்கினால், மதிப்பு வலுவடையும். இதில் முதல் சூழ்நிலை தான் தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ரூபாய் மதிப்பு சரிவால் சில சாதகமான சூழல்களும் உருவாகியிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
சர்வதேச வர்த்தகத்தில் இது நிச்சயம் ஏற்றத்தைத் தான் கொடுக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். எப்படி என்று பார்த்தோம் என்றால், தகவல் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, ஐவுளி மற்றும் பொறியியல் துறைகளை சார்ந்த நிறுவனங்கள் ரூபாயில் முதலீடு செய்திருந்தாலும், அவர்களுக்கான வருமானம் டாலரில் கிடைக்கும் என்பதால், நிச்சயம் இந்த நிறுவனங்கள் லாபம் காணும் என்பதில் சந்தேகமில்லை.
வெளிநாடுகளில் இந்திய பொருட்களின் விலை குறையும் என்பதால், அவற்றின் தேவை அதிகரிக்கும். இதனால் இந்தியாவில் ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிக்கும் எனச் சாதகமான வாய்ப்பை விவரிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். கார்ப்பேரட் நிறுவனங்களின் வருமானம் பெருகி, மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வதால், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். பங்குச்சந்தை பங்குகள், நிலம் உள்ளிட்டவற்றை சர்வதேச முதலீட்டாளர்களால் குறைந்த விலைக்கு வாங்க முடியும் என்பதால், இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் குவியும் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சுற்றுலாத்துறையை பொறுத்தவரையில், இந்திய வியாபாரிகளுக்கு இது நிச்சயம் வருமானத்தை பெருக்கும் காலம் எனக் கூறுகிறார்கள். டாலர் மதிப்பு உயர்வால் சர்வதேச சுற்றுலா செல்ல அதிக செலவாகும் என்பதால், உள்நாட்டில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களுக்கே மக்கள் முக்கியத்துவம் அளிப்பார்கள் என்றும், இதனால் உள்ளூர் வியாபாரிகளின் வருமானம் பெருகும் எனவும் உறுதிபட தெரிவிக்கிறார்கள்.
சுற்றுலாத் துறையை நம்பியிருக்கும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், சுற்றுலா வழிகாட்டு நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் லாபம் அடைவதற்கான சூழலே உருவாகியிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்திய வம்சாவளிகள், வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் தங்கள் குடும்பத்திற்கு டாலரில் அனுப்பும் பணத்தை, ரூபாயாக மாற்றும் போது, நல்ல தொகை கிடைக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
குடும்ப செலவினத்தை சமாளிப்பதற்கும், கடன் சுமையை குறைப்பதற்கும், முதலீடு செய்வதற்கும் இது நிச்சயம் உதவும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல், எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள், தங்கம் போன்றவற்றின் விலை அதிகரித்தாலும் பாதிப்பை சமாளிப்பதற்கான சூழல்களும் உருவாகி இருப்பது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமே.
















