எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகள் நிறைந்து காணப்படும் வீடியோ காட்சியால் இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் நேபாளம் மற்றும் சீனாவின் எல்லையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரத்து 848 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தச் சிகரம், அதன் இயற்கை அழகிற்காகப் போற்றப்படுகிறது.
அதனால்தான் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது பல சாகசகாரர்களின் கனவாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், நூற்றுக் கணக்கானோர் சிகரத்தை அடைய முயற்சிக்கின்றனர்.
ஆனால் அவர்களால் எவரெஸ்ட் சிகரத்திலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணம் எவரெஸ்ட் சிகரத்தில் சூழ்ந்து கிடக்கும் குப்பைகள்தான்.
பிளாஸ்டிக் பைகள், துணிகள், உணவுப் பொட்டலங்கள், காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் என மலையேற்ற வீரர்கள் கொண்டு செல்லும் பொருட்களை அங்கேயே விட்டுச் செல்வதுதான் காரணம் என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.
மேலும் மலையேற்றம் செல்லும் வீரர்கள் எவரெஸ்டின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















